மலையாள சினிமாவில் பல ஹிட் படங்களை அடுக்கியவர் நடிகர் சுரேஷ் கோபி. அரசியலுக்கு வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எவையும் திரையரங்குகளில் பெரிதளவில் சோபிக்கவில்லை.
இது குறித்து அவரும் சமீபத்தில் மனோரமா ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் “அரசியல் என்னுடைய சினிமா கரியருக்கு முட்டுக்கட்டையாக வந்தமைந்தது” எனக் கூறியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் அவர், “1998-ல் ‘களியாட்டம்’ படத்துக்காக தேசிய விருது வாங்கிய அந்தத் தருணத்தையும், பிறகு 2000-ல் ‘ஜலமர்மரம்’ படத்துக்காக தயாரிப்பாளருக்கான தேசிய விருது வாங்கிய தருணத்தையும் எப்போதும் போற்றி மகிழ்வேன்.
அந்த விருதுகள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. ஆனால் இப்படியான விஷயங்களுக்குப் பிறகு ஏதோ ஒன்று மாறிப்போனது. என் படங்கள் தேசிய அளவில் கவனம் பெறுவது நின்றுவிட்டது.
என்ன பிரச்சினை என்று எனக்கு இன்று வரை தெரியவில்லை, ஆனால், அரசியல் என்னுடைய சினிமா கரியரை பாதித்தது. 2014-ல் ‘அப்போதெகரி’ படப்பிடிப்பின் போது நரேந்திர மோடியைச் சந்தித்ததிலிருந்து எல்லாம் மாறிப்போனது.
‘அப்போதெகரி’ படம் விருதுகளுக்குப் போய்ச் சேரவில்லை. சொல்லப்போனால், கேரள மாநிலத்தைத் தாண்டி அந்தப் படம் எவருக்கும் சென்று சேரவில்லை. எந்தக் கமிட்டி உறுப்பினர்கள் தடுத்தார்கள் என்பது எனக்குத் தெரியும்.
நான் அமைச்சர் பதவியை ஒருநாளும் தவறாகப் பயன்படுத்தவில்லை. ‘படத்தைத் திரையிடுங்கள்’ என ஒரு நடிகனாக மட்டுமே கேட்டேன்.
ஆனால் நான் மத்திய அமைச்சராக இருந்ததால், அந்தக் கோரிக்கை கூட நிராகரிக்கப்பட்டது.
இதைத் தாண்டி என்னுடைய இன்னும் சில படங்களும் என் அரசியல் நிலைப்பாட்டால் பாதிக்கப்பட்டன.

பாவம் பிஜு மேனன் ‘கருடன்’ படத்திற்காக சிறந்த நடிகர் விருது பெற்றிருக்கலாம். அவருக்கும் கிடைக்கவில்லை. இந்த விஷயங்கள் எனக்கு வலியை ஏற்படுத்துகின்றன.
நான் ஒருநாளும் பத்ம விருதுக்கு விண்ணப்பித்ததில்லை. பலர் விண்ணப்பிப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனை நான் செய்ய மாட்டேன். தேசிய விருதுகள் தாமாகவே வர வேண்டும்.
என்னை மூவர்ணக் கொடியால் சுற்றி, இந்தியா சார்பில் துப்பாக்கி ஏந்திய மரியாதை கொடுத்தால் போதும். இருந்தாலும், ஒருவேளை அப்படியொரு கெளரவம் கிடைத்தால் அதை மரியாதையோடு ஏற்றுக்கொள்வேன்.” எனக் கூறியிருக்கிறார்.