அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்: சவுதி அரேபியா அறிவிப்பு

வாஷிங்டன்,

சவுதி அரேபியா நாட்டின் மன்னராக சல்மான் (வயது 88) உள்ளார். உடல்நல குறைபாடு காரணமாக அவருக்கு பதிலாக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். இந்தநிலையில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றார். ரியாத் மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டது. வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு வருகை தந்த இளவரசருக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ராணுவ வீரர்கள் புடைசூழ சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். ஓவல் அலுவலகத்தில் இருபெரும் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அணுசக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம், எப்-35 போர் விமானங்கள் விற்பனை, அமெரிக்காவில் வர்த்தக முதலீடு குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர் கூட்டாக இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டிரம்ப், “அமெரிக்காவில் ரூ.53 லட்சம் கோடி (600 பில்லியன் டாலர்கள்) முதலீடு செய்வதாக சவுதி அரேபியா ஏற்கனவே ஒப்புக்கொண்டது. தற்போது அதனை உயர்த்தி ரூ.88 லட்சம் கோடி (1 டிரில்லியன் டாலர்கள்) முதலீடு செய்ய ஒப்பந்தமிடப்பட்டுள்ளது.

இதற்காக நான் கூடுதலாக உழைக்க வேண்டியுள்ளது. சவுதியின் முதலீட்டால் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு மற்றும் வளங்கள் அதிகரிக்கும். பங்குச்சந்தை முதலீடு உயரும்” என்றார். அப்போது பத்திரிகையாளர் ஜமால் கஷோகி படுகொலை தொடர்பான கேள்விக்கு “இளவரசருக்கு அது குறித்து ஏதும் தெரியாது. அப்படியே விட்டுவிடுங்கள்” என்றார். 2018-ம் ஆண்டு இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்தில் ஜமால் கஷோகி டிரோன் தாக்குதலில் உயிரிழந்தார். இதில் இளவரர் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், “அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்லேடன் சவுதி மக்களை பயன்படுத்தினார். மேலும் அமெரிக்கா-சவுதி அரேபியா உறவுகளை சேதப்படுத்தினார். இதுபோன்ற பயங்ரவாத சம்பவம் இனிமேல் நடைபெறாமல் பாதுகாக்கப்படும். பயங்கரவாதம் ஒழிக்கப்படும். விரைவில் அமெரிக்காவில் ரூ.88 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும்” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.