நடிகவேள் எம்.ஆர்.ராதா முகமூடியணிந்த ஒரு கொள்ளைக் கூட்டம், சென்னையிலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்து 446 கோடி ரூபாயைக் கொள்ளையடிக்கிறது.
எக்கச்சக்கமாகப் பணம் சேர்க்க வேண்டும் என்ற ஆசையிலிருக்கும் டிடெக்டிவ் வேலுவும் (கவின்), இந்த நாட்டை விட்டே ஓடிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடிருக்கும் என்.ஜி.ஓ ஓனரான பூமியும் (ஆண்ட்ரியா ஜெரிமியா), கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தலில் நிற்கும் எம்.எல்.ஏ மணிவண்ணனும் (பவன்) இந்தக் கொள்ளையில் எப்படிச் சம்பந்தப்படுகிறார்கள் என்பதோடு, அந்தக் கொள்ளையை நடத்தியது யார் என்பதையும் பேசுகிறது அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக்கின் ‘மாஸ்க்’ திரைப்படம்.

கெத்தான உடல்மொழி, நக்கலான பேச்சு, சேட்டைக்கார குணம் எனப் படம் முழுவதும் ஜாலி பாயாக கவரும் கவின், எமோஷன் காட்சிகளையும் பொறுப்பாக அணுகி, அக்கதாபாத்திரத்தை அழுத்தமாக்குகிறார்.
நல்லவர், வில்லி, பலி ஆடு எனக் காட்சிக்குக் காட்சி பல பரிமாணங்களை எடுத்துக்கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தை, தன் தோரணையும் மர்மமும் கலந்த உடல்மொழியால் தாங்குகிறார் ஆண்ட்ரியா ஜெரிமியா. ஆக்ரோஷம், வஞ்சம் என வழக்கமான அரசியல்வாதியாகப் பவன்.
தன் அப்புராணித்தனத்தால் ருஹானி ஷர்மா முதல் பாதியில் கவர, தன் எதார்த்தமான நடிப்பால் சார்லி இரண்டாம் பாதிக்குக் கணம் கூட்டுகிறார். எக்கச்சக்க துணை நடிகர்கள் பட்டாளத்தில் வெங்கட் செங்குட்டுவன், கல்லூரி வினோத், ரமேஷ் திலக், சுப்பிரமணியம் சிவா, அர்ச்சனா, ஜார்ஜ் மரியன், ரெடின் கிங்ஸ்லி மட்டும் நினைவுக்கு வருகிறார்கள். படம் முழுவதும் பேச்சுத்துணைக்கு நெல்சன் திலீப்குமாரின் நையாண்டி கலந்த வாய்ஸ் ஓவர்!

பழங்கால ஹோட்டல், ஹைடெக் ஸ்டூடியோ, பூமியின் ரகசிய அறைகள் போன்றவற்றை முடிந்தளவுக்கு ஓவர்டோஸ் ஆகாமல், பலம் ஆக்கியிருக்கிறது ஜாக்கி, எம். விஜய் அய்யப்பனின் கலை இயக்கக் கூட்டணி. இவற்றில் நேர்த்தியான ஒளியமைப்பைக் கையாண்டு ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகர். அந்த மொட்டை மாடி க்ரீன்மேட் ஷாட் மட்டும் அநாவசியம் சாரே!
பல கிளைக்கதைகளைத் துண்டுதுண்டாகக் குவித்ததோடு, பல கட்களை அந்தரத்தில் மிதக்கவிட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஆர். ராமர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில், ‘கண்ணுமுழி’ பாடல் காதலைக் கசியவிட, ‘வெற்றி வீரனே’ பாடல் கதைக்கருவைப் பேசுகிறது. லவ், ஆக்ஷன், சேஷிங், ரகளை என எல்லா சக்கரத்திற்கும் தீனி போட்டு, சுழலவிட்டிருக்கிறது ஜி.வி-யின் பின்னணி இசை.
கொள்ளை சம்பவம், அதில் சம்பந்தப்பட்ட கவின், ஆண்ட்ரியா, பவன் ஆகியோரின் அறிமுகம், அவர்கள் முன் நிற்கும் பெரிய பிரச்னை போன்றவற்றை அடுக்கி, தொடக்கக் காட்சியையே இடைவேளை காட்சியைப் போல வைத்துத் தொடங்குகிறது படம்.
கவினின் குடும்பப் பின்னணி, அவரின் டிடெக்டிவ் சேட்டைகள், அவற்றைத் தாண்டி அவர் செய்யும் சாகசங்கள், ஆண்ட்ரியாவின் கதை, அவருக்கு இருக்கும் வெவ்வேறு முகங்கள், ட்விஸ்ட்கள், பவனின் கதை என மூன்று நெடுஞ்சாலைகளும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டபடியே நகர்ந்தாலும், எங்குமே நிதானமும், அழுத்தமுமில்லாமல் அச்சாணி இல்லா தேர் போலப் படம் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

கலகலப்பூட்டும் சில காட்சிகள், ரசிக்க வைக்கும் சில ஐடியாக்கள் போன்றவைச் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே நகர்ந்தாலும், அதீத கதை சொல்லல் அயற்சிக்கே வித்திடுகிறது.
நெல்சனின் வாய்ஸ் ஓவர், முக்கியக் கதாபாத்திரத்தின் வாய்ஸ் ஓவர், துணை கதாபாத்திரங்களின் வசனங்கள், பின்னணி இசை என எல்லாம் ஒரே தருணத்தில் வருவது, ‘நான்கு ஒலிச்சாலை’யில் பயணிக்கிற உணர்வைத் தருகிறது. இவற்றைத் தாண்டி கொள்ளை சம்பவத்தில் நடக்கும் லூட்டியும், இடைவேளை ட்விஸ்ட்டும் க்ளிக் ஆகியிருக்கின்றன.
இரண்டாம் பாதியிலும் ஆக்சிலேட்டரை விடாமல் அழுத்திக்கொண்டே ஓடுகிறது திரைக்கதை. இந்த ஓட்டத்தில் லாஜிக் மீறல்கள் எக்கச்சக்கமாக எட்டிப்பார்த்தாலும், அடுத்தடுத்து வரும் காமெடி காட்சிகளும், சில ஐடியாக்களும் சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடியே ஓடுகின்றன.
மூன்று கதாபாத்திரங்களின் கதையை அக்கொள்ளையோடு தொடக்கத்திலிருந்து தொடர்புப்படுத்தியே காட்சிகள் பின்னப்பட்டிருப்பதால், இரண்டாம் பாதியில் பல வேலைகள் மிச்சமாகியிருக்கின்றன. ஆனாலும், எமோஷன் பாதைக்கு இண்டிகேட்டர் போடும் திரைக்கதையில் நிதானம் மிஸ் ஆவதால், போதுமான எமோஷனும் மிஸ் ஆகிறது.

அதோடு, பயங்கரமான ட்விஸ்ட்களும் வரிசைக்கட்டுவது சிறிது அயற்சியைக் கொடுத்தாலும், நடிகர்களின் பங்களிப்பால் பாஸ் ஆகின்றன.
கதையாக, ஐடியாக்களாக, கதாபாத்திரங்களாகவும் கவர்ந்தாலும், அவற்றை நேர்த்தியான திரைக்கதையில் மாட்டிவிடத் தவறுவதால், இந்த ‘மாஸ்க்’ பாதி முகத்தையே மறைக்கிறது.