தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அரசியல் கட்சிகள் மெல்ல பரப்புரைகளைத் தொடங்கிவிட்டன. அதிமுக, தேமுதிக போன்ற கட்சிகள் கிராமங்கள் தோறும் பரப்புரை நிகழ்த்தி வருகின்றன.
அதே நேரம், இந்தத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான தகவல்களும் வரத் தொடங்கிவிட்டன. த.வெ.க தலைவர் விஜய், இந்தத் தேர்தல் தி.மு.க – த.வெ.க என்ற இருமுனைப் போட்டியாகவே இருக்கும் என்றார்.
அதிமுக – பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவோம் என வானதி சீனிவாசன் பேட்டியளித்து தேர்தல் களத்தைச் சூடாக்கியிருக்கிறார்.

காங்கிரஸ் வழக்கம் போல தி.மு.க-வுடன்தான் கூட்டணி எனப் பேசப்பட்ட நிலையில், த.வெ.க-வுடன் கூட்டணி வைக்க காங்கிரஸின் மத்தியத் தலைமை பேச்சுவார்த்தை நடத்துகிறது என்ற செய்தி வெளியாகி பரபரப்பானது.
இந்தக் கூற்றை மறுத்த தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் – தி.மு.க-வுடன் கூட்டணி என்பதை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வலியுறுத்தி வந்தார்.
இந்த நிலையில், காங்கிரஸ் தலைமை கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்திருப்பதாக செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை மாண்புமிகு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. மல்லிகார்ஜுன் கார்கே அவர்கள், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் திரு. கிரிஷ் சோடங்கர் அவர்கள் தலைமையில் அமைத்திருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கு. செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, திரு. சூரஜ் எம்.என். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, திரு. செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தன் எக்ஸ் பக்கத்தில், “தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலைக் கருதி திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு காங்கிரஸ் தலைமை ‘ஐந்து உறுப்பினர் குழு’வை நியமித்திருப்பதை வரவேற்கிறேன்.
‘இந்தியா கூட்டணி’யின் ஒற்றுமையை இந்த அறிவிப்பு வலியுறுத்துகிறது அரசல் புரசலாக அவ்வப்போது வெளியிடப்படும் செய்திகளுக்கு இந்த அறிவிப்பு முடிவு கட்டும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.