மதுரை – தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் – மயிலாடும்பாறை சாலையைச் சீரமைத்து, பொதுப்போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றவில்லையென்றால் தேர்தலை புறக்கணிக்க இரண்டு மாவட்ட கிராம மக்கள் முடிவெடுத்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் எழுமலை அருகே மல்லப்புரத்திலிருந்து தேனி மாவட்டத்திலுள்ள மயிலாடும்பாறையை இணைக்கும் 8 கிலோ மீட்டர் தூர மலைப்பாதை மூலம் 30 கிலோ மீட்டர் தூரமும், பயண நேரமும் மிச்சமாகும் என்பதால் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சாலையைச் சீரமைத்து அகலப்படுத்தி தர வேண்டும் என்று 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியிலுள்ள இரண்டு மாவட்ட கிராம மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள இந்த வனப்பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயமாக இருப்பதால் மல்லப்புரம் – மயிலாடும்பாறை சாலையை அகலப்படுத்தி, போக்குவரத்து வசதி ஏற்படுத்த வனத்துறை அனுமதிக்கவில்லை.
அதுமட்டுமின்றி இப்பகுதி புலிகள் சரணாலயமாகவும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. அதனால் ஏற்கனவே இருக்கின்ற சாலையைச் சீரமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வனத்துறையினர், சிறிய ரக வாகனங்கள் செல்லவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

சமீபகாலமாகப் பெய்து வரும் மழை காரணமாகவும் இந்தச் சாலை குண்டும் குழியுமாக மாறி சிறிய ரக வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அவதியை ஏற்படுத்தி வருகிறது. தேனி மாவட்டத்திலிருந்து விவசாயப் பொருட்களை சந்தைபடுத்த வரும் விவசாயிகளும், பள்ளி கல்லூரிக்கு வரும் மாணவ மாணவிகளும் பெரும் சிரமத்தைச் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில் இந்தச் சாலையைச் சீரமைத்து, பொது போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி கொடுக்க கோரி இரு மாவட்ட பகுதிகளில் உள்ள கிராம மக்களின் முக்கிய பிரதிநிதிகள் உசிலம்பட்டி சப் கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்கள், “சரியான சாலை வசதி இல்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டாகாலமாகச் சிரமத்தைச் சந்தித்து வருகிறோம். மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு பகுதியில் விளையும் விவசாயப் பொருட்கள் சேடப்பட்டி, பேரையூர் வழியாக விருதுநகர், தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்குக் கொண்டு செல்லவும், இப்பகுதியிலுள்ளவர்கள் அங்கு செல்லவும் இந்தச் சாலை உபயோகமாக இருக்கும்.
முதலில் இந்தச் சாலையைச் சீரமைத்து தரவேண்டும், அடுத்ததாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவில்லையென்றால் இரு மாவட்டப் பகுதிகளில் உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தனர்.