ராவல்பிண்டி,
பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிகள் இடையிலான முத்தரப்பு டி20 தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா – கமில் மிஸ்ரா களமிறங்கினர். பாகிஸ்தான் பந்துவீச்சை ஒரளவு சமாளித்த இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 31 ரன்கள் அடித்த நிலையில் பிரிந்தது. கமில் மிஸ்ரா 22 ரன்களில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன நிசங்கா 17 ரன்களில் அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஜனித் லியானகே 41 ரன், குசல் பெரெரா 25 ரன் தவிர மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் அடிக்கவில்லை. பாகிஸ்தான் சிறப்பாக பந்து வீசி இலங்கை அணியின் ரன் வேகத்தை கட்டுப்படுத்தியது.
இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி 128 ரன்கள் மட்டுமே அடித்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் முகமது நவாஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.