BB Tamil 9 Day 48: சாண்ட்ரா – திவ்யா அலப்பறைகள்; பந்தா காட்டிய பிரஜின்; எரிச்சலான விசே!

வழக்கமாக நெருடலை ஏற்படுத்தும் விஜய்சேதுபதியின் ‘பிரம்பு வாத்தியார்’ அவதாரம், இந்த எபிசோடில் கச்சிதமாகப் பொருந்தியது. ஏனெனில் சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் செய்த அநியாயமான சேட்டைகள் அப்படி. இந்த மூவர் மட்டுமே இந்த எபிசோடை முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டார்கள். க்ரைம் ரெக்கார்ட் அப்படி. 

மூவரையும் விசே வெளுத்து வாங்கினாலும் திவ்யாவை A1 குற்றவாளியாக்கி விட்டு சாண்ட்ரா பேபியை (நன்றி பாரு) தப்பிக்க வைக்க விசே முயல்கிறாரோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. 

பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? –  நாள் 48

“இன்னிக்கு நீங்க பார்க்காத படத்தை காட்டறோம். முன்ன எல்லாம் பொிய மனுஷங்க போராட்டம் பண்ணி ஜெயிலுக்குப் போவாங்க. ஆனா இவங்களை ஜெயிலுக்கு அனுப்பறதே போராட்டமா ஆயிடுச்சு. வாங்க வெள்ளிக்கிழமை நிகழ்வுகளைப் பார்க்கலாம்” என்றார் விசே. வழக்கமாக இந்த போர்ஷன் சுருக்கமாக முடிந்து விடும். ஆனால் இன்று சாண்ட்ரா+திவ்யா கூட்டணியின் அலப்பறை காரணமாக நீண்ட நேரத்திற்கு காட்டப்பட்டது. 

BB TAMIL 9: DAY 48

ஏற்கெனவே சொன்னது போல, சாண்ட்ரா + திவ்யாவை வேலை பார்க்க வைக்கும் சூப்பர்வைசர் பணி விக்ரமிற்கு தரப்பட்ட தண்டனையாக அமைந்தது. “என்னங்க செய்றீங்களா…?” என்று கேட்டே சோர்ந்து போனார். ஒருவர் படுத்தபடி வீட்டைப் பெருக்குவதை எங்குமே பார்த்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ‘பெருக்காசனம்’ செய்து உலக சாதனை செய்தார் திவ்யா. 

‘வேலை செய்யறீங்களா?” என்று விக்ரம் மீண்டும் கேட்க “எனக்கு தலை வலிக்குது. டீ வேணும். பிளாக் டீல்லாம் வேணாம்.. பால் டீதான் வேணும்” என்று அடம்பிடித்தார் திவ்யா. புத்திசாலித்தனமான குற்றவாளிகள், சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி தங்களுக்கான தண்டனையை எவ்வளவு இழுக்க முடியுமோ அவ்வளவு இழுப்பார்கள். சாண்ட்ராவும் திவ்யாவும் அப்படியாக நேரத்தை இழுத்துக் கொண்டே போனார்கள். 

“இது பிக் பாஸ் ஆர்டருங்க. உங்களை ஜெயில்ல அடைக்கச் சொல்லியிருக்காங்க” என்று விக்ரமும் எஃப்ஜேவும் கெஞ்ச “எங்க வேலை முடியலை. முடிஞ்சவுடன்தான் வருவோம்” என்று அழிச்சாட்டியம் செய்தார்கள். 

நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்த சாண்ட்ரா – திவ்யா அலப்பறைகள்

காலை, மாலை மட்டும் பால் தரவேண்டும் என்று ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருப்பதால் அந்த நோக்கில் பால் தர முடியாது என்று தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மறுத்தார் எஃப்ஜே. “மெடிக்கல் எமர்ஜென்சின்னா கூடவா தர மாட்டீங்க?” என்றார் திவ்யா. தலைவலி எப்போது மெடிக்கல் எமர்ஜென்சியில் சேர்ந்தது என்று தெரியவில்லை. 

“இவன் பாலை எங்கதான் போய் ஊத்துவான்.. அவன் ஃபேமிலிக்கா?” என்று பிரஜின் வார்த்தைகளை விட்டது அநியாயம். “உன் வொய்ஃபை கூட்டிட்டு வாங்க” என்று இந்தப் போட்டிக்கு சம்பந்தமில்லாத குடும்ப உறுப்பினர்களை அநாவசியமாக இழுப்பதை பிரஜின் வழக்கமாக வைத்திருக்கிறார். 

தனக்கு பால் தராமல் போன அநீதியை எண்ணி பாத்ரூமில் சென்று திருட்டு அழுகை அழுதார் திவ்யா. “போங்க.. இப்ப போய் அவ கழுத்தைப் பிடிச்சு இழுத்துட்டு வந்து ஜெயில்ல தள்ளுங்க” என்று விக்ரமிடம் சொல்லி ஓவராக சீன் போட்டார் சாண்ட்ரா. “நான் ஏங்க ..கழுத்தையெல்லாம் பிடிக்கப் போறேன்” என்று கசப்பாக சிரித்தார் விக்ரம்.  “அப்ப மூடிட்டு போங்க” என்கிற மாதிரி சைகை காட்டினார் சாண்ட்ரா. விக்ரம் பாடிய பாடல் வரிகளை வைத்து ‘லைஃப்ல நீ மறக்க மாட்டே’ என்று சாபம் விட்டுக் கொண்டே போனார். 

BB TAMIL 9: DAY 48

“இது பிக் பாஸ் ஆர்டர். ஜெயில்ல போடணும்” என்று விக்ரமும் எஃப்ஜேவும் மறுபடி வந்து கெஞ்ச “சாவிய வெச்சிட்டு போங்க.. வரேன்.. வர முடியாது’ என்றெல்லாம் சொன்னார் திவ்யா. விக்ரம் அகன்ற பிறகு “என்ன திமிர் பாரேன்.. இவனுக்கு?” என்றார். 

தண்டனையிலிருந்து தப்பிக்க எவ்வளவு நேரம் இழுக்க முடியுமோ, அவ்வளவு நேரத்தை இழுத்த கிரிமினல்களான சாண்ட்ராவும் திவ்யாவும் இரவு முழுவதும் வீட்டை தூங்க விடாமல் அதிகாலை மூன்று மணிக்குத்தான் ஒருவழியாக சிறைக்குள் சென்றார்கள். அதுவரை கார்டன் ஏரியாவில் இருந்த மற்ற போட்டியாளர்கள் உள்ளே செல்ல “பாம்புங்கள்லாம் உள்ளே போகுது” என்று கனியை டார்கெட் செய்து வசைபாடினார் சாண்ட்ரா. 

பாருவின் நெகட்டிவிட்டி பற்றி குறை சொன்னவர்கள், பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்ளும் மர்மம்

ஒரு விஷயம்தான் புரியவில்லை. வைல்ட் கார்ட் எண்ட்ரிகளாக சாண்ட்ரா, திவ்யா, பிரஜின் ஆகிய மூவரும் உள்ளே நுழையும் போது பாரு செய்து கொண்டிருந்த அடாவடிகளை கண்டித்தார்கள். ‘இது வெளில எப்படி தெரியும் தெரியுமா’ என்று எச்சரித்தார்கள். எனில் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒருவர் மோசமாக நடந்து கொண்டால் அது பல மடங்கு வெறுப்பை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தும் என்பது ஷோவைப் பார்த்து விட்டு வந்திருக்கும் இவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் இவர்கள் அனைவருமே மீடியாவில் இருப்பதால் அதன் பவரை நன்கு உணர்ந்திருப்பார்கள். 

எனில், பாருவிற்கு பாடம் சொன்ன இவர்கள் பாருவை விடவும் மோசமாக நடந்து கொள்வதற்கு என்ன காரணம்? இவர்கள் அட்வைஸ் வேடம் கலைந்து அசல் நிறம் வெளிப்படுகிறதா? அல்லது பெயர் கெட்டாலும் பரவாயில்லை, கன்டென்ட் தந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்கிற டிராமாவா?

BB TAMIL 9: DAY 48

மேடைக்கு வந்த விசே “தன்னை புத்திசாலின்னு நம்பற முட்டாள்களும், வீரன்னு நெனச்சிக்கிற கோழைகளும் வீட்டுக்குள்ள இருக்கறாங்க.. அவங்களை முதல்ல பாராட்டுவோம். ஸோ… நீங்க நல்லா கைத்தட்டுங்க.. அவங்க கன்ஃப்யூஸ் ஆகட்டும்”என்கிற வேடிக்கையுடன் உள்ளே சென்றார். 

திரை விலகியதும் பார்வையாளர்கள் மிகையாக கைத்தட்ட, தங்களுக்கு கிடைத்த பாராட்டாக போட்டியாளர்கள் எடுத்துக் கொண்டார்கள். “பிரஜின்.. எப்பவும் ஒரு போஸ்லதான் உக்காந்திருக்கீங்க?” என்று கிண்டலடித்தார் விசே. (பின்னே.. ஹீரோ மெட்டீரியல் ஆச்சே?!) “திவ்யா.. சாண்ட்ரா.. நல்லாயிருக்கீங்களா.. இவர்கள் இருவரும் வீரமங்கையர்கள்.. பிக் பாஸையே எதிர்த்து பேசுவாங்க.. நடப்பாங்க” என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தார் விசே. 

பதில் சொல்லாமல் அடம்பிடித்த திவ்யா

“ஏன் ஜெயிலுக்கு போக மாட்டேன்னு அடம்பிடிச்சீங்க. என்னதான் வேலை செஞ்சீங்க?” என்று விசே விசாரிக்கும் போது அவர்கள் தூங்கும் சூப்பர் டீலக்ஸ் வீட்டை மட்டும் நன்றாக பெருக்கியுள்ளது தெரியவந்தது. “எனக்கு தலைவலி சார்” என்று ஸ்கூலுக்கு மட்டம் போட்ட மாணவன் மாதிரி ஆரம்பித்தார் திவ்யா. சாண்ட்ரா இடையில் சிரிக்க “அப்படி சிரிக்காதீங்க.. எரிச்சலாகுது” என்று வெளிப்படையாகவே கோபப்பட்டார் விசே. 

திவ்யாவின் டிராமாவை ஏற்காத விசே ‘என்னவொரு ஆட்டிடியூட்.. பிக் பாஸ் கண்ணை திறந்து வெச்சிருக்கணுமா.. மூடணுமான்னுல்லாம் சொல்லத் தெரியுது. இந்த ஷோ உங்களால மட்டும் நடக்கலை. சாண்ட்ரா.. உங்க பேரு ஸ்பாயில் ஆகும்ன்னு திவ்யாவிற்கு நல்லா தெரியும். நோயாளின்ற லேபிள்ல தப்பிச்சுடுவாங்க.” என்று வெடித்தார் விசே. 

உண்மையில் சாம்பார் அணி, டாக்ஸிக் அணியாக மாறியதற்கு சாண்ட்ராவின் துர்உபதேசங்கள்தான் காரணம். கைகேயி மாதிரி கூடவே உதவியாக இருந்தார் பாரு. 

“திவ்யாவிற்குத்தான் தலைவலி.. நீங்க ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்கப்பட “செஞ்சேன் சார்.. அப்புறமா திவ்யாவிற்கு தலைவலி வந்துடுச்சா.. அதான் கூடவே உதவிக்கு நின்னேன்” என்று சாண்ட்ரா மழுப்ப, திவ்யா எதையோ சொல்வதற்கு கை காட்ட “உக்காருங்க. வேலை செய்ய வக்கில்லை” என்று ஆத்திரமானார் விசே. 

BB TAMIL 9: DAY 48

“அவங்களுக்கு தலைவலி.. நீங்கதான் தனியா ஆடறவங்களாச்சே. ஏன் வேலை செய்யலை?” என்று சாண்ட்ராவிடம் கேட்க ‘திவாகர் பாணியில்’ தலையைக் குனிந்தபடி நின்றார் அப்பாவி சாண்ட்ரா. 

படுத்துக் கொண்டே வீடு பெருக்கிய லட்சணத்தை விசே விசாரிக்க “அது சும்மா ஜாலிக்காக பண்ணினது” என்றார் திவ்யா. “நீங்க உங்க வீ்ட்டுல எப்படி வேணா பெருக்குங்க. யார் கேட்கப் போறா.. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதை மதிக்கணும். நீங்க உங்க ஜாலிக்கு பண்ணக்கூடாது. பார்க்கற எங்களுக்குத்தான் ஜாலியா இருக்கணும்.” என்றெல்லாம் விசே காட்டமானார்.

திவ்யாவின் திமிர் காரணமாக எரிச்சலான விசே

விசேவின் கோபத்தைக் கண்டு திவ்யா முகம் சுளிக்க “என்ன டயர்ட்டா இருக்கா.. வேணுமின்னா வெளிய வந்துடறீங்களா… உடம்பு சரியில்லைன்னா உக்காருங்க” என்று விசே சொல்ல ‘பரவாயில்ல நிக்கறேன்’ என்று கெத்து காட்டினார் திவ்யா. “ஹலோ.. உக்காருன்னா உக்காரணும்.. என்ன பழக்கம் இது?” என்று கோபமானார் விசே. 

“நீங்க சொல்லுங்க. சாண்ட்ரா.. கோபம் வந்தா எது பேசணும்ன்னு இல்லையா.. பிக் பாஸிற்கே அட்வைஸ் பண்ணுவீங்களா.. அதையெல்லாம் நீங்க யாருங்க சொல்றதுக்கு?” என்று சாண்ட்ராவை ரோஸ்ட் செய்த விசே, சட்டென்று திரும்பி “நீங்க டென்ஷன் ஆகாதீங்க பிரஜின்” என்று சொன்னது டைமிங் நகைச்சுவை. மீசையை முறுக்கிக் கொண்டு பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார் பிரஜின். 

BB TAMIL 9: DAY 48

“விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” – வாக்குமூலம் தந்த திவ்யா

“போன வாரம்தான் சொல்லிட்டுப் போனேன். பிக் பாஸ் சொல்றதை மதிங்கன்னு.. தீபக் கூட வந்து கண்கலங்கிட்டுப் போனார். உங்களுக்குள்ள சண்டை போடுங்க.. ஆனா பிக் பாஸ் சொல்றத மதிங்க.. பாவம் அவரும் ஒண்டியா என்னதான் பண்ணுவாரு” என்று விசே சொன்னதைக் கேட்டு பிக் பாஸிற்கே கண்கலங்கியிருக்க வேண்டும். 

மறுபடியும் திவ்யாவிடம் “ஏன் வேலை செய்யலை?” என்று விசே கேட்க திவாகர் பாணியை இப்போது திவ்யாவும் பின்பற்றினார். பாரு வழக்கம் போல் தனது சேஷ்டையான சிரிப்பை வைக்க “பாரு.. உங்களைப் பத்தி எனக்கு நல்லாத் தெரியும். எது எதுக்கு எப்படி சிரிப்பீங்கன்னு தெரியும்” என்று விசே நையாண்டி செய்ய அதற்கும் அசட்டுச்  சிரிப்பை வைத்தார் பாரு. (இவன் இன்னும் திருந்தல மாமா மோமெண்ட்!).

“நீங்க உங்க வீட்டுல மகாராணியாவே இருந்துட்டுப் போங்க. ஆனா இங்க பிக் பாஸ் சொல்றதுதான் ரூல். நீங்க தப்பிக்கவே முடியாது. பதில் சொல்லாம இருக்க முடியாது” என்று கேட்டு சலித்துப் போன விசே ‘நான் பிரேக்ல போறேன்” என்று கிளம்பினார். (திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!)

விசே பிரேக்கில் சென்றதும் “என்ன பதில் சொல்லணும்.. விக்ரமை வெறுப்பேத்ததான் அப்படி செஞ்சேன்” என்று தன்னிச்சையாக உண்மை திவ்யாவிடம் வாயில் இருந்து விட்டது. பிரேக்கில் இருந்து திரும்பிய விசே “திவ்யா.. இதை அப்பவே சொல்லியிருக்கலாமே.. விக்ரமை வெறுப்பேத்த செஞ்சீங்களா.. உக்காருங்க” என்று சொல்லி “சாண்ட்ரா.. அவங்க கூட கூட்டு சோ்ந்தா உங்க கேம் பாதிக்கும். எடுப்பார் கைப்பிள்ளையா மாறிடாதீங்க” என்று சாண்ட்ராவிற்கு அட்வைஸ் செய்தது ஓவர். பாருவிற்குப் பிறகு இந்த சீசன் அதிகமாக டாக்ஸிக் ஆனதற்கு காரணமே சாண்ட்ராதான். அவரையே ஏதோ ஒரு குழந்தை போல சித்தரிப்பதை விசே தவிர்த்திருக்க வேண்டும். 

BB TAMIL 9: DAY 48

சாண்ட்ரா பேபி  – செல்லம் கொஞ்சிய பாருவின் பச்சோந்தித்தனம்

ஒருவழியாக இந்த ‘மிட்நைட் பஞ்சாயத்து’ முடிந்ததும் அடுத்ததாக ‘சோறு – சோப்பு – மாப்பு’ டாஸ்க்கிற்கு வந்த விசே “டாஸ்க் ரொம்ப நல்லா பண்ணீங்க”என்று பாராட்டினார். (சர்காஸமோ?!) “எல்லோரும் டீமா பிரிஞ்சு உக்காருங்க. டீம்ல இருக்கறவங்க உங்க கேப்டனைப் பத்தி சொல்லுங்க” என்று விசாரணையை ஆரம்பித்தார். 

விக்ரம் டீமில் இருந்த சுபிக்ஷா தன் லீடரைப் பற்றி நல்ல வார்த்தைகள் சொன்னார். ஆனால் சாம்பார் டீமில் இருந்தவர்களே சாண்ட்ராவை குத்தினார்கள். “எங்க டீம் டாக்ஸிக் தன்மையோட ஆனதுக்கு சாண்ட்ராவோட தப்பான டைரக்ஷன்தான் காரணம்” என்றார் வியானா. 

அடுத்ததாக பாரு எழுந்தார். அவர் சாண்ட்ராவை காட்டித் தர மாட்டார் என்பது வெளிப்படை. கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் “திவாகர் போனதுல இருந்து ஒரு மாதிரியா இருந்தது. அதான் சமையல் டீம்ல ஒட்டிக்கிட்டேன். சமையல்ன்றது இங்க பிரம்மாஸ்திரம். அத வெச்சு எதையாவது பண்ணலாம்னு .. ‘“ என்று பாரு இழுக்க “கனியை இத  வெச்சுதானே ராஜமாதான்னு கிண்டல் பண்ணுவீங்க. இப்ப நீங்க ராஜமாதாவா மாற டிரை பண்றீங்களா?” என்று விசே மடக்க ‘இதை நாம எதிர்பார்க்கலையே’ என்கிற மாதிரி திகைத்து நின்றார் பாரு. 

BB TAMIL 9: DAY 48

“சாண்ட்ரா பேபி என்ன பண்ணாலும் மன்னிச்சு விட்ற மாதிரி க்யூட்னஸ் இருக்கும்” என்று பாரு அள்ளி விட “இப்படி ஏத்தி விட்டுத்தான் அவங்க இந்த நிலைமைக்கு வந்திருக்காங்க. இது அந்தப் பய புள்ளைகளுக்கு புரியல.” என்று விசே ஜாலியாக கொளுத்திப் போட “சலங்கையைக் கட்டியாச்சு.. நடிச்சுதானே ஆகணும்” என்றார் பாரு. ‘இது அவங்களுக்குத் தெரிய மாட்டேங்குதே” என்று பாருவின் பச்சோந்தித்தனத்தை நகைச்சுவை மோடில் சுடடிக் காட்டினார் விசே. “சார். வேணாம்..சார்.. அப்புறம் டிரையின் இந்தப் பக்கம் திரும்பிடும்” என்று பாரு நடுங்க “அடடா.. பயப்படற மாதிரி கூட நடிக்கறாங்கப்பா.. என்னால முடியல. நான் போறேன்” என்று விசே சொல்ல சபை கலகலத்தது. 

ஹீரோ மாதிரி பந்தா காட்டி ஜீரோவான பிரஜின்

பிரேக் முடிந்து வந்து மீண்டும் பாருவிடம் விசாரணையைத் தொடர்ந்தார் விசே. “அதாவதுங்க சார்.. சாண்ட்ரா இன்னும் கொஞ்சம் எண்டர்டெயின்மென்ட் தந்திருக்கலாம். கனியும் சாண்ட்ராவும் ஒத்துப் போயிருக்கலாம்” என்று ஈயம் பூசிய மாதிரியும் பூசாத மாதிரியும் பேச “டீம் கேப்டன் யாரு.. சாண்ட்ராதானே.. அவங்கதானே கோஆர்டினேட் பண்ணியிருக்கணும்.

அடுத்ததாக பிரஜின் பஞ்சாயத்து. ஹீரோ பேசிய பன்ச் வசனங்களை பேப்பரில் குறித்து வைத்துக் கொண்டு வரிசையாக சொன்ன விசே “விக்ரம் சொன்னது கப்புளா இருக்கும் போது எமோஷனல் சப்போர்ட் கிடைக்குன்ற பத்தி. இந்த அபிப்ராயம் எல்லோருக்குமே இருக்கு. பிக் பாஸ் வீட்டுக்குள் யார் வரலாம்ன்ற முடிவை நாங்கதான் எடுப்போம். பிக் பாஸ் கிட்ட சொல்றேன். சேது கிட்ட பேசறேன்னு நீங்க எப்படி சொல்லலாம்.. அதை சொல்ல நீங்க யாரு. நீங்க சொன்னா கதவைத் திறக்கணும். நீங்க சொன்னா கண்ணை மூடிக்கணுமா.. வண்டி என் பக்கம் வந்தா கண்டம் பண்ணிடுவேன்னு சொல்றீங்க.. 

BB TAMIL 9: DAY 48

… ஐ எம் எ ஃபாதர் ஐ எம் எ ஹஸ்பண்ட்.. ஐ எம் எ ஹீரோன்னு சொல்றீங்க. இதையெல்லாம் மத்தவங்க சொல்லணும் சார். வியானாவையும் சுபிக்ஷாவையும் ‘காலி பண்ணிடுவேன்’ன்னு மிரட்றீங்க. இதுதான் ‘சரியா வளர்க்கப்பட்டவன்’ற அடையாளமா.. பாலை யாருக்கு ஊத்தப் போறான்.. அப்பாவுக்கா.. அம்மாவுக்கா..ன்னு கேக்கறீங்க.. இதெல்லாம் நியாயமா.. உங்க குழந்தைங்க இதை பார்க்க மாட்டாங்களா.? என்று பிரஜினை நிற்க வைத்து கேள்வி மழை பொழிந்தார் விசே. ஆனால் பிரஜினோ முறைப்பான போஸில் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார். 

‘பால் ஊத்தும் வசனம் எனக்கு கேட்கவேயில்லை. கேட்டிருந்தா தடுத்திருப்பேன்’ என்று அபாண்டமாக புளுகினார் சாண்ட்ரா. “நான் சொன்ன எதையும் மறுக்கல. நான் இப்படித்தான். ஒருத்தருக்கு தலைவலின்னா பால் தர மாட்றாங்க. நான் கேப்டனா இருந்தா தந்திருப்பேன்” என்று பிரஜின் சமாளிக்க “ஒரு சோ் கொடுங்கப்பா.. உக்காருவோம். இது ரொம்ப நேரம் போவும் போலிருக்கு” என்று சேரை வரவழைத்த விசே, பிரஜின் அலட்டல் மாதிரியே கால் மேல் கால் போட்டு உட்கார, பார்வையாளர்கள் அதைப் புரிந்து கொண்டு ஆர்ப்பரித்தார்கள். 

தக்காளி சட்னி – ரத்தம் ஃபார்முலாவைப் பின்பற்றும் பாரு

“நான் தனியாத்தான் ஆடறேன். நாமினேஷன் ப்ரீபாஸ் எனக்கு தரப்பட்ட போது வேணாமின்னு மறுத்தேன்” என்று பிரஜின் சொல்ல கூட்டம் சிரித்தது. “பால் வேணுமின்னா சண்டை போட்டு கூட வாங்கியிருக்கலாம். அது உங்க கேம். ஆனா இப்படியா அநாகரிகமா வார்த்தைகளை விடறது?” என்று பொங்கினார் விசே. 

தன் குடும்பத்தினரைப் பற்றி பிரஜின் அவதூறாக பேசியதை இப்போதுதான் எஃப்ஜே அறிகிறார். எனவே அவருக்கு கோபம் வந்தது நியாயம். பொறுக்க முடியாமல் அவர் பொங்க “இந்த எஃப்ஜே ரொம்ப துள்றான்” என்று போட்டுக் கொடுத்தார் பாரு. இந்த சமயத்தில் பாருவின் பச்சோந்தித்தனம் மேலும் அம்பலமானது. 

திவ்யா வைல்ட் கார்டாக வந்த சமயத்தில் ‘என்னைப் பத்தி எப்படி வெளிய தெரியுது?” என்று கேட்டு போட்டு வாங்க முயன்றார் பாரு. கம்ருதீன் விவகாரம் பற்றி சொன்ன திவ்யா “வீட்ல உங்க அம்மா பார்த்தா என்ன நெனப்பாங்க?” என்று ஓர் அக்கறையில் சொல்லி விட அப்போதைக்கு மண்டையை ஆட்டினாலும் பிறகு “அதெப்படி எங்க வீட்டைப் பத்தி நீ பேசலாம்?” என்று திவ்யாவை நாள் முழுவதும் திட்டிக் கொண்டிருந்தார் பாரு. 

BB TAMIL 9: DAY 48

பிரஜினும் சாண்ட்ராவும் – ஜாடிக்கேற்ற வன்ம மூடிகள்

ஆனால் அதே பாருதான், இப்போது எஃப்ஜேவின் கோபத்திற்கு ஆட்சேபம் தெரிவிக்கிறார். தனக்கு வந்தால் ரத்தம். மற்றவருக்கு வந்தால் தக்காளி சட்னி பாலிசி.  “ண்ணா.. உங்களுக்காகத்தான் இப்ப கம்முன்னு இருக்கேன்” என்று எஃப்ஜே சொல்ல “குட் மாறிட்டே வர்றீங்க இல்லையா..அதுதான் முதிர்ச்சி” என்று சமாதானப்படுத்தினார் விசே. 

“நீங்களே சண்டை போடுங்கன்னு சொல்றீங்க.. நீங்களே சண்டை வேணாம்ன்னு சொல்றீங்க. ஒண்ணும் புரியலை” என்று பிரஜின் விதாண்டாவாதம் பேச “சண்டை போடுங்க. அது உங்க கேம். ஆனா அது ஒரு எல்லைக்குள்ள நாகரிகமா இருக்கணும். கம்முவைப் பாருங்க.. இப்ப கம்முன்னு ஆயிட்டாரு. அவர் ஆடாத ஆட்டமா.. உங்களுக்கும் புரியும்” என்று பிரஜினுடன் மல்லுக்கட்டிய விசே, கோட்டை கழட்டிய படியே எரிச்சலுடன் சென்றார். 

“பர்சனல் வேற.. கேம் வேற” என்று என்னதான் விசே சொல்லி அனுப்பினாலும் பிரஜின் அதை வைத்து அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது போல் தெரிகிறது. வீறாப்பாக நிற்பதும், முறைப்பதும் என்று ஹோஸ்ட்டிற்கு மரியாதை தரவில்லை. விசேவும் கூட பிரஜினுடன் விவாதிக்கும் போது வார்த்தைகள் வராமல் திண்டாடினார். இனியாவது சேனலுக்கு நெருக்கமானவர்களை போட்டிக்கு தோ்வு செய்யக்கூடாது என்பது இதன் மூலம் தெரிய வரும் பாடம். ஆனால் பின்பற்ற மாட்டார்கள்.

 விசே சென்றதும் எஃப்ஜேவிற்கும் பாருவிற்கும் சண்டை நிகழ்ந்தது. “உங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி பேசினா உனக்கு கோபம் வரும்தானே. கோள் மூட்டி வேலையை வெச்சுக்காதீங்க” என்று பொங்கினார் எஃப்ஜே. 

“அப்பவே சொன்னேன். நம்ம குழந்தைகள் பார்ப்பாங்க.. வார்த்தைகளை விடாதீங்கன்னு” என்று பிரஜின் குறித்து புலம்பினார் சாண்ட்ரா. ஆனால் இவரும் அதையேதான் செய்கிறார் என்பது இவருக்குப் புரியவில்லையா? 

BB TAMIL 9: DAY 48

இப்படி ஆயிடுச்சே. என்று சாண்ட்ரா அழுது  புலம்பியது கூட ஓகே. ஆனால் ‘அவர் அக்கா.. தங்கச்சின்னு சொன்னது.. கனியைப் பத்திதான்’ என்று சமாளித்த விதம் இருக்கிறதே.. அநியாயம். எனில் கனியைப் பற்றி தவறாக சொன்னால் மட்டும் ஓகேவா?…

முன்னரே சொன்ன மாதிரி பாருவின் நச்சுத்தன்மையால் கெட்டுப் போயிருந்த இந்த ஷோ, சாண்ட்ரா, திவ்யா, பிரஜினின் வருகைக்குப் பிறகு கூடுதல் நச்சாக மாறியிருக்கிறது. சண்டை, வன்மம், பழிவாங்கல், கோள் மூட்டுதல், பச்சோந்தித்தனம் என்று பல நெகட்டிவிட்டிகள். சுவாரசியம் என்பதின் சதவீதம் மிகவும் குறைவு. 

இந்த வாரத்தில் இவர்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டால் நன்றாக இருக்கும் ஆனால் அது நடக்காது. வேறு பலியாட்டை தோ்வு செய்வார்கள். பார்ப்போம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.