இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசியிருக்கிறார்.
அதில் தவெகவினரை திமுகவினர் மற்றும் சில கட்சிகள் ‘தற்குறிகள்’ எனக் குறிப்பிட்டு விமர்சிப்பது குறித்து வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் விஜய்.
இது குறித்துப் பேசியிருக்கும் விஜய், “நம்ம தவெக இளம் தோழர்கள், GEN Z கிட்ஸ் தவெக தோழர்களை எல்லாம் ‘தற்குறிகள்’ என சொல்லி நல்லா வாங்கிக் கட்டிக் கொள்கிறார்கள்.

சமீபத்துல ‘அறிவுத் திருவிழா’னு ஒன்னு நடத்துனாங்க. சாரி, அது ‘அவதூறு திருவிழா’. அதுல இப்போ, ‘அவங்க தற்குறிகள் இல்லை. அவங்கள அப்படி சொல்லாதீங்க. அங்க ஒன்னும் சங்கிகள் கிடையாது’னு ஒரு குரல். அவங்க கட்சியோட அறிவுக் கண்ணை திறந்து வைக்கிற மாதிரி பேசியிருக்கிறார் அவங்களோட எம்.எல்.ஏ.
யாருடா அதுனு பார்த்தா, அவர் நம்ம தவெக கொள்கைத் தலைவர் அஞ்சலை அம்மாள் அவர்களோட சொந்தக்காரராம். அவர் நமக்கு ஆதரவாகப் பேசுகிறார்.
‘மர்மயோகி’ படத்துல எம்.ஜி.ஆர் ‘குறி வைத்தால் தவறவிடமாட்டேன். தவறு என்றால் குறியே வைக்க மாட்டேன்’ என்பார். அப்படித்தான் இந்த விஜய்யும்.
அரசியல் புரிதல் நமக்கு இல்லைனு சொல்றாங்க. நான் ஒன்னு கேட்குறேன், ‘மக்கள் எல்லாரும் உங்களுக்குத் தற்குறிகளா?’.
எங்களுக்கு ஓட்டு போடுகிற மக்கள் தற்குறிகள் என்றால், அதே மக்கள்தானே இவ்வளவுநாள் உங்களுக்கு ஓட்டுப் போட்டாங்க. அவங்க தற்குறிகளா? மக்களுக்கு நீங்க கொடுக்கிற மரியாதை இதுதானா?

இந்த தற்குறிகள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் உங்க அரசியலையே கேள்விக் குறியாக்க போறாங்க.
இவங்க எல்லாம் தற்குறிகள் இல்லை, தமிழ்நாட்டின் ஆச்சர்யக் குறிகள். மாற்றத்திற்கான அறிகுறிகள்.
சும்மா லாஜிக்கே இல்லாம ‘தற்குறி தற்குறி’னு சொல்லிட்டு இருக்கக் கூடாது” என்று ‘தவெக’ வினரை ‘தற்குறிகள்’ என்று விமர்சிப்பவர்களுக்குப் பதிலடி கொடுத்துப் பேசியிருக்கிறார் விஜய்.