ஐபிஎல் 2026 ஏலத்துக்கான எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டிருக்கும் நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் மீண்டும் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது தலைமையை நிரூபிக்கத் தயாராகிவிட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான புதிய பயணத்தை தொடங்கும் முன், கேரள மாநில டி20 அணியை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய பேசுபொருளாக மாறியிருப்பவர் சஞ்சு சாம்சன். சமீபத்தில் தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அவர் மாற்றப்பட்டார் என்ற செய்தி வெளியாகி கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஐபிஎல் வர்த்தக பரபரப்பு அடங்குவதற்குள், இப்போது மீண்டும் ஒரு முக்கிய பொறுப்பு அவரத் தேடி வந்துள்ளது.
Add Zee News as a Preferred Source

சையத் முஷ்டாக் அலி டிராபி
நவம்பர் 26-ம் தேதி தொடங்கவுள்ள சையத் முஷ்டாக் அலி டிராபி (Syed Mushtaq Ali Trophy) டி20 தொடருக்கான கேரள மாநில அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முறை அறிவிக்கப்பட்டுள்ள கேரள அணியில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு அம்சம், சஞ்சு சாம்சனின் சகோதரரான சாலி சாம்சனும் அணியில் இடம் பிடித்திருப்பது தான். இவர்கள் இருவரும் முன்னதாக கேரள கிரிக்கெட் லீக் தொடரில் ஒன்றாக விளையாடியுள்ளனர். அந்த லீக்கில் ‘கொச்சி ப்ளூ டைகர்ஸ்’ என்ற அணியின் கேப்டனாக சாலி சாம்சன் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது மாநில அளவிலான அணியிலும் அண்ணனும் தம்பியும் ஒரே ஜெர்சியில் களமிறங்குவது கேரள கிரிக்கெட் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அணியில் அதிரடி மாற்றங்கள்
கேரள கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள இந்த அணியில் சில முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. அணியின் துணை கேப்டனாக அகமது இம்ரான் நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் வாய்ந்த விக்னேஷ் புத்தூர் மற்றும் விஷ்ணு வினோத் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். விஷ்ணு வினோத் விக்கெட் கீப்பராகவும் செயல்படவுள்ளார். அதே போல, கேரள கிரிக்கெட் லீக்கில் கடந்த இரண்டு சீசன்களாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த வேகப்பந்து வீச்சாளர் அகில் ஸ்காரியாவும் அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனால், மூத்த வீரரான சச்சின் பேபி இந்த முறை அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சீசனில் குரூப் சுற்றை கூட தாண்ட முடியாமல் கேரள அணி வெளியேறியது. அந்த ஏமாற்றத்தை போக்கி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் சஞ்சு சாம்சன் தலைமையில் ஒரு புதிய, இளமையான படையை நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.,
லக்னோவில் பலப்பரீட்சை
இந்த தொடரில் கேரள அணி ‘குரூப் ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் மும்பை, ரயில்வேஸ், விதர்பா, ஒடிஷா, சண்டிகர் மற்றும் ஆந்திரா போன்ற வலுவான அணிகளும் உள்ளன. சஞ்சு சாம்சன் தலைமையிலான கேரள அணி, தனது முதல் போட்டியில் நவம்பர் 26-ம் தேதி ஒடிஷாவை எதிர்கொள்கிறது. கேரள அணியின் அனைத்து லீக் சுற்றுப் போட்டிகளும் லக்னோவில் நடைபெறவுள்ளன. இதற்காக அணியின் ஒரு பகுதி வீரர்கள் நவம்பர் 23-ம் தேதியே லக்னோ புறப்படுகின்றனர். மத்திய பிரதேசத்திற்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி வரும் மற்ற வீரர்கள், இந்தூரிலிருந்து நேரடியாக லக்னோ வந்து அணியுடன் இணைந்துகொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சஞ்சுவின் அடுத்த இலக்கு
ஐபிஎல் களத்தில் தோனியின் மஞ்சள் படையான சிஎஸ்கேவுக்கு செல்லும் முன், உள்ளூர் போட்டிகளில் தனது பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க சஞ்சு சாம்சனுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பாகும். கடந்த முறை தவறவிட்ட வெற்றியை, இம்முறை தனது சகோதரர் மற்றும் இளம் வீரர்களுடன் இணைந்து சஞ்சு சாத்தியமாக்குவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கேரள அணியின் முழு விவரம்
சஞ்சு சாம்சன் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ரோஷன் குன்னும்மல், முகமது அசாருதீன், அகமது இம்ரான் (துணை கேப்டன்), விஷ்ணு வினோத், கிருஷ்ணா திவான், அப்துல் பாசித், சாலி சாம்சன், சல்மான் நிசார், கிருஷ்ணா பிரசாத், சிபின் பி. கிரிஷ், அன்கித் சர்மா, அகில் ஸ்காரியா, பிஜு நாராயணன், ஆசிப் கே.எம், எம்.டி. நிதீஷ், விக்னேஷ் புத்தூர், ஷராபுதீன் என்.எம்
About the Author
RK Spark