‘பலூன்’ படத்தின் இயக்குநர் சினீஷ் தயாரிப்பாளராக அவதாரமெடுத்து தேசிய விருது வென்ற ‘பார்கிங்’ படத்தைத் தயாரித்திருந்தார்.
அப்படத்தைத் தொடர்ந்து இன்று அவருடைய தயாரிப்பில் உருவாகும் அடுத்த இரண்டு படங்களுக்கான பூஜை நடந்திருக்கிறது.
அதில் ஒன்று அர்ஜூன் தாஸ் நடிக்கும் ‘சூப்பர் ஹீரோ’ திரைப்படம், மற்றொன்று ‘ஃபைனலி’ பாரத் நடிக்கும் ‘நிஞ்சா’ திரைப்படம்.
இப்படங்களுக்கான பூஜையில் சிவகார்த்திகேயன், நெல்சன், வெங்கட் பிரபு, மிர்ச்சி சிவா, ஆர்யா எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசுகையில், ” ‘சூப்பர் ஹீரோ’ படத்திற்காக அர்ஜூன் தாஸுக்கு வாழ்த்துகள். ‘நிஞ்சா’ டீமுக்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.
இந்தக் கதையின் ஐடியா எனக்குத் தெரியும். ரொம்பவே சுவாரஸ்யமானது அது.
நெல்சன் அண்ணன்கிட்ட நான் ‘வேட்டை மன்னன்’ படத்துல உதவி இயக்குநராக வேலை பார்த்தேன். அப்போ எங்களுக்கு ஆபீஸ் எதுவும் கிடையாது. தயாரிப்பாளர்கள், நடிகர்கள்னு யாரும் அப்போ உறுதியாகல.
அப்போ, நாங்க மெரினா பீச்ல உட்கார்ந்துதான் கதை பேசுவோம். நெல்சன் அண்ணன் சொல்ற விஷயங்களை நான் எழுதுவேன்.
ஆபீஸ் போட்டதுக்குப் பிறகு அருண் ராஜா வந்து சேர்ந்தாரு. அதன் பிறகு சினிஷ் (பலூன் பட இயக்குநர் & பார்க்கிங் பட தயாரிப்பாளர்) வந்தாரு. அவர் நெல்சன் அண்ணனுடைய ஃப்ரெண்ட்னு எனக்குத் தெரியும்.
அப்போ அவர் என்கிட்ட ‘நீங்க என்னவாக ஆகப்போறீங்க சிவா’னு கேட்டாரு. அப்போ எனக்கு ஹீரோவாகணும்னு எண்ணம் கிடையாது.
‘வேட்டை மன்னன்’ படத்துல அப்போ உதவி இயக்குநர், ஒரு காமெடி ரோல் செய்திட்டு இருந்தேன். சினிஷை வம்பிழுப்போம்னு ‘நான் ஹீரோவாகணும்’னு சொன்னேன்.
உடனே அவர் ‘எதுக்கு உங்களுக்கு இந்த வேலைலாம். உங்களுக்கு டைமிங் நல்லா வருது. சைட்ல காமெடி ரோல் பண்றதுக்கு ஆசைப்பட்டால் ஓகே’னு சொன்னாரு.
உடனே நான் ‘ஏன், நாங்களெல்லாம் ஹீரோவாகக் கூடாதா?’னு கேட்டேன். அவர் ‘தேவையில்லாத வேலைப் பார்க்கிறீங்க. இந்த ஹீரோலாம் உங்களுக்கு வேணாம்னு’ சொன்னாரு.

அவர் சொன்ன விஷயத்தையே நான் மறந்துட்டேன். நான் ஹீரோவானப் பிறகு அவருக்கு ஒரு நாள் இந்த விஷயம் நினைவுக்கு வந்து என்கிட்ட ‘அன்னைக்கு பேசினதை மனசுல வச்சுக்காதீங்க’னு சொன்னாரு.
அப்போ கொஞ்சம் பிஸியாக இருந்து பேசாம இருந்ததுனால, அவர் மேல நான் கோபமாக இருக்கேன்னு நினைச்சுட்டு இருக்காரு. ஆனா, அந்த விஷயத்தையே நான் மறந்துட்டேன்.
அவர் இது மாதிரி நிறைய விஷயங்களை வெளிப்படையாகப் பேசிடுவாரு. அதுனால நிறைய பஞ்சாயத்தும் வந்திருக்கு (சிரித்துக் கொண்டே…).
எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இன்னைக்கு சினிமாவுல இத்தனை பேரை அவர் சம்பாதிச்சிருக்கிறதுதான் அவருடைய நான் சக்சஸாகப் பார்க்கிறேன்.” என உற்சாகத்துடன் பேசினார்.