இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, கடைசியாக ஒருநாள் போட்டியில் விளையாடி இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர் மிரட்டி வந்தாலும், அடுத்து வரும் ஒருநாள் தொடரில் அவர் இடம் பெறவில்லை. இருப்பினு டி20 தொடரில் நிச்சயம் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், பும்ராவின் இந்த நீண்ட இடைவெளி குறித்த காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
Add Zee News as a Preferred Source

ஜஸ்பிரித் பும்ரா
இந்திய அணியின் ‘யார்க்கர் கிங்’ என்று அழைக்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வருகிறார். ஆனால், ஒருநாள் கிரிக்கெட் பக்கம் அவர் தலைகாட்டி நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. குறிப்பாக சொல்லப்போனால், 2023-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி தான் அவர் கடைசியாக விளையாடிய ஒருநாள் போட்டி.
கடைசி போட்டியின் சோகம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது ரசிகர்களுக்கு இன்னும் வடுவாக உள்ளது. அந்த போட்டியில் பும்ரா சிறப்பாகவே பந்து வீசினார். தனது 9 ஓவர்களில் 43 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் மார்ஷ் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே நம்பிக்கையூட்டினார். ஆனால், டிராவிஸ் ஹெட்டின் சதம் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அந்த கண்ணீர் தோல்விக்கு பிறகு, பும்ரா இந்திய ஜெர்சியில் ஒருநாள் போட்டியில் இதுவரை களமிறங்கவில்லை.
இரண்டு ஆண்டு இடைவெளி ஏன்?
பும்ரா 2024 மற்றும் 2025-ம் ஆண்டுகளில் ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இடையில் வந்த இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ‘பணிச்சுமை மேலாண்மை’. பும்ராவின் பந்துவீச்சு பாணி உடலுக்கு அதிக அழுத்தம் தரக்கூடியது என்பதால், அவரை டெஸ்ட் மற்றும் முக்கிய டி20 தொடர்களுக்கு மட்டும் பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
அடுத்த தொடரிலும் ஓய்வு!
தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா விளையாடி வருகிறார். கவுகாத்தியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் பந்துவீசியதால், நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால், ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ராவின் மேஜிக்கை பார்க்க முடியாமல் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை முடிந்த பிறகு மீண்டும் பும்ரா ஒருநாள் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
About the Author
RK Spark