ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் மலவத் மோகன் (வயது 42). கூலி தொழிலாளியான இவருக்கு கவிதா, சங்கீதா என்ற 2 மனைவிகள் உள்ளனர். மது பழக்கத்துக்கு அடிமையான மோகன் தினமும் குடித்துவிட்டு அவர்கள் 2 பேரையும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வந்த மோகன் 2 பேரையும் சரமாரியாக தாக்கி வீட்டுக்குள் பூட்டி வைத்து விட்டு சென்றார். எனவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரும் மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரும் சேர்ந்து கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தனர். இதற்காக காலையிலேயே பாட்டிலில் பெட்ரோல் வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். அவர்கள் திட்டமிட்டபடியே இரவு மது அருந்தி விட்டு வந்த மோகன் வீட்டில் அயர்ந்து தூங்கினார். அப்போது பாட்டிலில் இருந்த பெட்ரோலை அவர் மீது ஊற்றி தீ வைத்தனர். இதனால் அலறி துடித்த அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான அவரது 2 மனைவிகளையும் வலைவீசி தேடி வருகின்றனர்.