Central Government : ஸ்பேம், மோசடி அழைப்புகளை தடுப்பது குறித்த முக்கிய தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ளது. அதில், மொபைல் யூசர்கள் அனைவரும் தங்கள் மொபைல் எண்களில் வரும் ஸ்பேம் (தேவையற்ற) அழைப்புகள் மற்றும் SMS-களை வெறுமனே பிளாக் செய்யாமல், TRAI DND செயலி (App) மூலம் கண்டிப்பாகப் புகாரளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஸ்பேம் மொபைல் எண்களை பிளாக் செய்வதாலேயே, அடுத்தடுத்து ஸ்பேம் கால்கள் வருவதை தடுக்காது என்பதை TRAI சுட்டிக் காட்டியுள்ளது.
Add Zee News as a Preferred Source
டிராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரம்
இது தொடர்பாக கடந்த ஓராண்டில், பொதுமக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் TRAI நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் விளைவாக, ஸ்பேம் மற்றும் மோசடி செய்திகளில் ஈடுபட்ட 21 லட்சத்துக்கும் அதிகமான மொபைல் எண்கள் மற்றும் சுமார் ஒரு லட்சம் கனெக்ஷன்கள் துண்டிக்கப்பட்டதாக தெரிவித்திருப்பதுடன், அவற்றை கருப்புப் பட்டியலிலும் சேர்த்துள்ளதாக டிராய் அறிவித்துள்ளது.
TRAI DND செயலியின் முக்கியத்துவம்
இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டு மக்கள் அதிகாரப்பூர்வ TRAI DND செயலி மூலம் ஸ்பேம் குறித்துப் புகாரளித்ததாலேயே இந்த பெரிய அளவிலான நடவடிக்கை சாத்தியமானது என கூறியுள்ளது. ஒரு யூசர், TRAI DND செயலியில் ஸ்பேம் அழைப்பு அல்லது SMS பற்றிப் புகாரளிக்கும்போது மட்டுமே, TRAI மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களுக்கு அந்த மொபைல் எண்களைக் கண்டறிந்து சரிபார்க்கவும், நிரந்தரமாகத் துண்டிக்கவும் உதவுகிறது என டிராய் கூறியுள்ளது. மாறாக, உங்கள் மொபைலில் ஒரு எண்ணை பிளாக் செய்து வைப்பது என்பது உங்கள் தனிப்பட்ட ஸ்மார்ட்போனில் இருந்து மட்டுமே அதை தடுக்க முடியும். இதன் மூலம் அந்த நபர்கள் பிறரைத் தொடர்புகொள்வதிலிருந்து மோசடி செய்பவரைத் தடுக்காது என டிராய் கூறியுள்ளது.
பொதுமக்கள் கவனத்துக்கு
* அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து TRAI DND செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.
* குற்றவாளிகளை அடையாளம் கண்டு துண்டிக்க உதவுவதற்காக, உங்கள் மொபைலில் ஸ்பேம் அழைப்புகள்/SMS-களைத் தடுப்பதற்குப் பதிலாக, TRAI DND செயலி மூலம் புகாரளிக்கவும்.
* அழைப்புகள், செய்திகள் அல்லது சமூக ஊடகங்களில் தனிப்பட்ட அல்லது வங்கி விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும்.
* மிரட்டலான அல்லது சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் உடனடியாகத் துண்டிக்கவும்.
* சைபர் மோசடிகளை தேசிய சைபர் குற்ற உதவி எண் (1930) அல்லது www.cybercrime.gov.in மூலம் புகாரளிக்கவும்.
* தொலைத்தொடர்பு வளங்களை துஷ்பிரயோகம் செய்து மோசடி செய்ய முயற்சித்தால், சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) இணையதளத்தில் உள்ள Chakshu அம்சத்தைப் பயன்படுத்திப் புகாரளிக்கவும்.
TRAI-யின் உறுதி:
அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, நம்பகமான தொலைத்தொடர்பு சூழலை உறுதி செய்வதில் ஆணையம் உறுதியாக உள்ளது. தொடர்ச்சியான அமலாக்க நடவடிக்கைகள், தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் கண்காணிப்பு மற்றும் TRAI DND செயலி மூலமான பொதுமக்களின் பங்கேற்பு ஆகியவை ஸ்பேமை அதன் மூலத்திலேயே நிறுத்த அவசியம். TRAI அனைத்து குடிமக்களையும் – குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள் பயனர்கள் மற்றும் டிஜிட்டல் அனுபவம் குறைவாக உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், இந்த அறிவுரையைப் பகிர்ந்து கொள்ளுமாறும், எந்தவொரு சந்தேகத்திற்கிடமான தகவல்தொடர்புகளையும் உடனடியாகப் புகாரளிக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.