காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான கங்காதரனுக்கும் அவரின் மனைவி நந்தினிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மணிமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சாலமங்கலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நந்தினி சென்றார். அப்போது மனைவியைத் தேடி கங்காதரன் அங்கு வந்தார். மதுபோதையிலிருந்த கங்காதரன், மனைவியின் நடத்தையின் சந்தேகப்பட்டு அவதூறாக பேசியதாகக் கூறப்படுகிறது.

அதனால் கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கங்காதரன், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்தில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த நந்தினி உயிரிழந்தார். அதனால் கங்காதரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து போலீஸாருக்கு நந்தினியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் நந்தினியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து கங்காதரனைப் பிடித்து விசாரித்தனர். விசாரணைக்குப் பிறகு கங்காதரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அம்மா கொலை செய்யப்பட, அப்பா சிறைக்குச் செல்ல இவர்களின் இரண்டு மகன்களும் ஆதரவின்றி தவித்த காட்சி, காண்பவரை கண்கலங்க வைத்தது.