லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டம் ஜங்கில் ரசூல்பூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர் தீபக். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ஷிவானி (வயது 20) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீபக் உடனான காதலை ஷிவானி முறித்துக்கொண்டார். இதையடுத்து கடந்த மே மாதம் ஷிவானிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், திருமணத்திற்குப்பின் கணவர் வீட்டில் இருந்த ஷிவானி நேற்று முன் தினம் ரசூல்பூரில் உள்ள தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். ஷிவானி இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார். அப்போது அவரது வீட்டிற்கு வந்த தீபக் தன்னுடனான காதலை முறித்துவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்தது தொடர்பாக ஷிவானியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் தீபக் தான் மறைத்து கொண்டு வந்த அரிவாளால் ஷிவாங்கியை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ஷிவாங்கி உயிரிழந்தார்.
ஷிவாங்கி வெட்டிக்கொல்லப்பட்டது குறித்து அதிகாலை குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து சென்ற போலீசார் ஷிவாங்கியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் முன்னாள் காதலி ஷிவாங்கியை கொலை செய்த தீபக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தீபக் இடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.