சென்னை,
கவுகாத்தியில் நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் பிடிவில் சிக்கியுள்ளது. ஏனெனில் தென் ஆப்பிரிக்கா நிர்ணயித்த 549 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 27 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன ஜெய்ஸ்வால் 13 ரன்களிலும், கே.எல். ராகுல் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். இந்திய அணி வெற்றி பெற இன்னும் 522 ரன்கள் அடிக்க வேண்டும். மறுபுறம் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 8 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இத்தகைய சூழலில் நாளை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கனவே கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள தென் ஆப்பிரிக்க அணி இந்த டெஸ்டிலும் வெற்றி பெற்று இந்திய மண்ணில் 25 ஆண்டுக்கு பிறகு டெஸ்ட் தொடரை வெல்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதன் காரணமாக இந்திய அணி மீது நிறைய விமர்சனங்கள் எழுந்துள்ளன.
முன்னதாக முதல் போட்டியில் ஆடிய அக்சர் படேல் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக நிதிஷ் ரெட்டி 2-வது போட்டியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் எந்த வித தாக்கத்தையும் அவர் ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுகள் மிகவும் தவறாக இருப்பதாக முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். அத்துடன் நிதிஷ் ரெட்டியை ஆல் ரவுண்டர் என்று சொன்னது யார்? என்றும் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “நிதிஷ் ரெட்டியை யார் ஆல் ரவுண்டர்னு சொல்றாங்க? யாராவது அவர் பந்துவீச்சைப் பார்த்து ஆல் ரவுண்டர்னு சொல்ல முடியுமா? அவர் மெல்போர்னில் சதம் அடித்தார். ஆனால் அதன் பிறகு அவர் என்ன செய்தார்? ஒரு வெளிச்சம் கோடை காலத்தை உருவாக்காது என்று அனைவரும் சொல்வார்கள்.
ஒருவேளை நிதிஷ் ரெட்டி ஆல் ரவுண்டர் என்றால் நானும் சிறந்த ஆல் ரவுண்டர்தான். அவரை எப்படி நீங்கள் ஆல் ரவுண்டர் என்றழைப்பீர்கள்? அவரது பந்து வீச்சில் வேகம், நகர்வு ஒன்றை ஏதேனும் இருக்கிறதா? அவர் ஆபத்தான பேட்ஸ்மேனும் கிடையாது. எனவே ஒரு மண்வெட்டியை மண்வெட்டி என்று மட்டுமே அழையுங்கள்.
இதற்கிடையே நித்திஷ் ரெட்டியை நீங்கள் ஒருநாள் அணியிலும் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்? அவர் என்ன செய்திருக்கிறார்? அவர் பாண்ட்யாவுக்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரா? அப்படியானால் அக்சர் படேல் ஏன் இல்லை?.
கவுதம் கம்பீர் என்ன வேணாலும் சொல்லலாம். எனக்கு கவலையில்லை. நான் ஒரு முன்னாள் கேப்டனாகவும், தேர்வுக்குழுவின் முன்னாள் தலைவராகவும் இருந்திருக்கிறேன். நான் என்ன பேசுகிறேன் என்று எனக்கு தெரியும். உங்களுக்கு நிலைத்தன்மை தேவை” என்று கூறினார்.