பெங்களூரு,
ஆந்திரா மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள பிக்கிம்வாரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தேவிஸ்ரீ (வயது 21). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் பி.பி.எம். படித்து வந்தார். இதற்காக கல்லூரி விடுதியிலேயே தேவிஸ்ரீ தங்கியிருந்தார்.
நேற்று காலை தேவிஸ்ரீ தனக்கு பழக்கமான பிரேம் வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் தம்மேனஹள்ளியில் தனது தோழியின் அறைக்கு சென்றார். அறையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவிஸ்ரீயின் தோழி வெளியே சென்றிருந்தார். மாணவி அறையில் பிரேம் வர்தன் திடீரென தேவிஸ்ரீயை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் மத நாயக்கனஹள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்த தேவிஸ்ரீ உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மாணவியை, பிரேம் வர்தன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரேம் வர்தனை தேடி வருகின்றனர். தேவிஸ்ரீயை அவர், காரணத்திற்காக கொலை செய்தார்? அவர்கள் என்ன இடையே என்ன பிரச்சினை ஏற்பட்டது?” என்பது தெரியவில்லை.
பிரேம் வர்தனை கைது செய்தால் தான் கொலைக்கான முழு காரணங்களும் தெரியவரும். தேவிஸ்ரீயின் பெற்றோர் நேற்று பெங்களூரு வந்தனர். அவர்கள் தேவிஸ்ரீயின் உடலை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோ தனைக்கு பிறகு குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது.