கொல்கத்தா,
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பங்கேற்று பேசியதாவது:-
தேர்தல் கமிஷன் ஒரு பாரபட்சமற்ற அமைப்பாக இல்லை. அது பா.ஜனதா கமிஷனாக மாறிவிட்டது. அரசியல் ரீதியாக என்னை எதிர்த்துப் போராடி தோற்கடிக்க முடியாது என்று பா.ஜனதாவிடம் பலமுறை கூறிவிட்டேன். மேற்கு வங்கத்தில் எனக்கு அவர்கள் சவால் விடுத்தால், நாடு முழுவதும் பா.ஜனதாவின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்வேன்.
சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினரை அகற்றுவதே சிறப்பு தீவிர திருத்தப்பணியின் நோக்கம் என்றால், ஏன் பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் இந்த பணி நடத்தப்படுகிறது? இரட்டை எஞ்சின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஊடுருவல்காரர்கள் உள்ளனர் என்பதை அந்த கட்சி ஒப்புக்கொள்கிறதா? தேர்தல் கமிஷனும், பா.ஜனதாவும் இணைந்து உருவாக்கியுள்ள பேரழிவு சூழ்நிலையை வரைவு வாக்காளர் பட்டியல் வெளிப்படுத்தும். பீகார் தேர்தல் முடிவு இந்த சிறப்பு திருத்தப்பணியின் விளைவுதான். அங்குள்ள எதிர்க்கட்சிகளால் பா.ஜனதாவின் விளையாட்டை புரிந்து கொள்ள முடியாததால் இந்த முடிவு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.