பிசாவு,
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கினியா-பிசாவு குடியரசு. இந்நாட்டின் அதிபராக உமரோ சிசோகோ எம்பலோ செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, கினியா-பிசாவு நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளுங்கட்சி சார்பில் உமரோ சிசோகோ மீண்டும் போட்டியிட்டார். எதிர்க்கட்சி வேட்பாளராக பெர்னாண்டோ டியாஸ் போட்டியிட்டார். தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு நாளை முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அதேவேளை, தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் டியாஸ் தகுதி நீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில், கினியா-பிசாவுவில் இன்று ராணுவ புரட்சி ஏற்பட்டுள்ளது. அதிபர் மாளிகைக்குள் ஆயுதங்களுடன் புகுந்த ராணுவத்தினர் அதிபர் உமரோ சிசோகோவை கைது செய்தனர். தலைமை தேர்தல் ஆணையம், உள்துறை அமைச்சகமும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, தலைநகரில் அமைந்துள்ள அதிபர் மாளிகை, தலைமை தேர்தல் ஆணையத்திலும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது. மேலும், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.