முன்னாள் கிரிக்கெட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்த் மற்றும் நடிகை சம்யுக்தா சண்முகநாதன் திருமணம் இன்று நடைபெற்றுள்ளது.
விளம்பர மாடலாக தனது பயணத்தைத் தொடங்கி நடிகையாக பணியாற்றிவருபவர் சம்யுக்தா. 2007ஆம் ஆண்டில் மிஸ் சென்னை பட்டத்தை வென்ற இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகமெங்கும் பிரபலமானார். காபி வித் லவ், துக்ளக் தர்பார், மைடியர் பூதம், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

அனிருத்தாவும் சம்யுக்தாவும் கடந்த சில காலமாகவே பழகி வந்தநிலையில் இவர்களது உறவு குறித்து ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டிருந்தது.
முன்னாள் இந்திய கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஶ்ரீகாந்த். இவர் இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைகாட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராகவும் நிபுணராகவும் பணியாற்றிவருகிறார். அனிருத்தா மற்றும் சம்யுக்தா தங்கள் சமூக வலைத்தளங்களில் திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ந்துள்ளனர்.

சம்யுக்தாவுக்கு முந்தைய திருமணத்தில் ஒரு மகன் இருக்கிறார் என்பதும், அனிருத்தா ஏற்கெனவே விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்துக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
.