பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா வேனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கி (வயது 22). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதேபகுதியை சேர்ந்த ஒரு சிறுமியுடன் நட்பாக பழகி, பின்பு காதல் வலையில் விழவைத்தார். பின்னர் வெங்கி, சிறுமியை வீட்டுக்கு அழைத்து சென்று திருமணம் செய்து கொள்வதாக கூறி வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இதேபோல், அவர் பலமுறை அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை, அவரது பெற்றோர் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமியிடம் கேட்டனர். அப்போது வெங்கி திருமணம் செய்துகொள்வதாக கூறி பலாத்காரம் செய்ததை தெரிவித்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் வேனூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கியை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.