தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி சந்தித்த படுதோல்வி, இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி திணறுவதை கண்ட பிசிசிஐ, ஓய்வு பெற்ற மூத்த வீரர்களை மீண்டும் அணிக்கு அழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, விராட் கோலியின் பெயர் இதில் அடிபடுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது, கடந்த 12 மாதங்களில் இந்தியா சந்திக்கும் இரண்டாவது ‘ஒயிட்வாஷ்’ ஆகும். ஏற்கனவே நியூசிலாந்திடம் சொந்த மண்ணில் தொடரை இழந்த நிலையில், இந்த தோல்வி பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மீது கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
Add Zee News as a Preferred Source

பிசிசிஐ-யின் புதிய திட்டம் என்ன?
கிரிக்பஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சில மூத்த வீரர்களை, மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்குமாறு பிசிசிஐ கேட்டுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதில் விராட் கோலியின் பெயர் முதன்மையாக உள்ளது. “விராட் கோலியை தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அணுகலாம் என்ற யோசனை பிசிசிஐ வட்டத்தில் பேசப்பட்டு வருகிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில் ஓய்வு பெற்ற மற்றொரு வீரரும் தனது முடிவை மாற்றிக்கொள்ள தயாராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கம்பீர் வருகை
கௌதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தான், ரவிச்சந்திரன் அஷ்வின், ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றனர். ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் தொடரின் போது ஓய்வை அறிவித்தார் அஸ்வின். இங்கிலாந்து தொடருக்கு முன்பாக, கடந்த மே மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றனர் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா. 14 ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியின் தூணாக இருந்த கோலி, 123 போட்டிகளில் 9,230 ரன்கள் மற்றும் 30 சதங்களை விளாசியுள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.
பேட்டிங் சரிவு
தென்னாப்பிரிக்கத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் மிக மோசமாக சொதப்பியது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் 124 ரன்களை கூட எட்ட முடியாமல் சுருண்டதும், இரண்டாவது டெஸ்டில் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதும், அனுபவமிக்க வீரர்களின் தேவையை உணர்த்தியுள்ளது. தற்போது ரோகித் மற்றும் கோலி ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகின்றனர். டெஸ்ட் அணியின் இந்த சரிவைச் சரி செய்ய, ‘கிங் கோலி’ மீண்டும் வெள்ளை சீருடையில் களம் காண்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும் இருவரும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெறுவது சாத்தியம் இல்லை என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
About the Author
RK Spark