சிக்கலில் கவுதம் கம்பீர், அஜித் அகர்கர்? பிசிசிஐவுடன் திடீர் சந்திப்பு! என்ன காரணம்?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு திடீர் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதில் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் பிசிசிஐ உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர். டெஸ்ட் தொடர் தோல்வியை தொடர்ந்து, அணியின் செயல்பாடு மற்றும் தேர்வில் உள்ள குழப்பங்களை தீர்க்கவே இந்த கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Add Zee News as a Preferred Source

சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வியின் எதிரொலியாக, அணியின் எதிர்கால திட்டங்கள் மற்றும் வீரர்களின் தேர்வு முறை குறித்து விவாதிக்க வேண்டிய கட்டாயம் பிசிசிஐ-க்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் எதிர்காலம் குறித்த வதந்திகள் பரவி வரும் சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

யார் யார் பங்கேற்பு?

இந்த கூட்டத்தில் பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, இணை செயலாளர் பிரப்தேஜ் சிங் பாட்டியா, தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் மிதுன் மன்ஹாஸ் இதில் பங்கேற்பாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. போட்டி நடைபெறும் நாளன்று கூட்டம் திட்டமிடப்பட்டுள்ளதால், மூத்த வீரர்கள் இதில் கலந்துகொள்ள வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கூட்டத்தின் நோக்கம் என்ன?

ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி கூறியதாக ஸ்போர்ட்ஸ்டார் வெளியிட்ட தகவலின்படி, அணியின் தேர்வில் ஒரு நிலைத்தன்மையை உறுதி செய்வதே இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். சமீபத்திய டெஸ்ட் தொடரின் போது களத்திலும், களத்திற்கு வெளியேயும் எடுக்கப்பட்ட சில முடிவுகள் குழப்பத்தை ஏற்படுத்தின. இது குறித்து தெளிவு பெற நிர்வாகம் விரும்புகிறது. அடுத்த டெஸ்ட் தொடருக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில், இப்போதே அதற்கான திட்டமிடலை தொடங்க வேண்டும். அடுத்த ஆண்டு டி20 உலகக்கோப்பையையும், அதற்கடுத்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையையும் இந்தியா சந்திக்கவுள்ளது. எனவே, அணியில் உள்ள குறைகளை விரைவாக களைவது அவசியம் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கோலி – ரோகித் சர்ச்சை

நிர்வாகத்திற்கும் மூத்த வீரர்களுக்கும் இடையே தகவல் தொடர்பு இடைவெளி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. விராட் கோலியை டெஸ்ட் ஓய்விலிருந்து திரும்ப அழைப்பது குறித்து பிசிசிஐ விரும்புவதாக செய்திகள் வெளியாகின. ஆனால், ராஞ்சியில் நடந்த முதல் ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய கோலி, அத்தகைய முடிவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். மொத்தத்தில், இந்திய கிரிக்கெட் அணியை மீண்டும் வெற்றி பாதைக்குத் திருப்பவும், நிர்வாக சிக்கல்களை தீர்க்கவுமே இந்த அவசர கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய அணியின் எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

About the Author


RK Spark

…Read More

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.