ஸ்டன்ட் இயக்குநர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திற்காகத் தயாராகி வருகிறார் கமல் ஹாசன்.
இப்படத்திற்காக மலையாள சினிமாவிலிருந்து தொழில்நுட்பக் குழுவினரை அழைத்து வந்திருக்கிறார்கள்.
கூடிய விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் மனோரமா ஊடகம் நடத்திய நிகழ்வில் கமல் ஹாசன் நேற்றைய தினம் பங்கேற்றிருக்கிறார். அங்கு அவர் ரிடையர்மென்ட் பற்றிய கேள்விக்குப் பதில் தந்திருக்கிறார்.
இந்த நிகழ்வில் தொகுப்பாளர் கமல் ஹாசனிடம், “‘தக் லைஃப்’ போன்ற உங்களின் புதிய படங்களை ‘கமலின் கம்பேக்’ என்று பிராண்ட் செய்வது சரியா?
இதுபோன்ற படங்களுக்கான உற்சாகம் பழைய தலைமுறையினருக்கு மட்டுமே இருக்குமா? இன்றைய இளைஞர்கள் புதிய கூட்டணிகளைத்தான் விரும்புகிறார்களா?” எனக் கேட்டார்.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த கமல் ஹாசன், “புதிய காம்போக்கள் வர வேண்டும் என்பது முக்கியம்.

பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். என்னிடம் நடிப்பிலிருந்து ஓய்வு பெறுவீர்களா என இதுவரை யாரும் கேட்டதில்லை.
ஆனால் மோசமான படங்களை எடுக்கும்போது எனக்கு ஓய்வு பெற வேண்டும் எனத் தோன்றும். அப்போது என்னுடைய நண்பர்கள், ‘இப்போது நிறுத்தாதே, ஒரு நல்ல படம் செய்துவிட்டு ரிடையர்மென்ட் எடுத்துக்கொள்’ எனச் சொல்வார்கள்.
இன்னும் நான் அந்த ஒரு நல்ல படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன்” எனப் பேசியிருக்கிறார்.