நாடாளுமன்ற வளாகத்துக்கு நாயுடன் வந்த எம்.பி: பாஜகவினர் கண்டனம் – சர்ச்சையின் பின்னணி என்ன?

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி ரேணுகா சவுத்ரி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (01.12,2025) நாய் ஒன்றை தன்னுடன் அழைத்துக்கொண்டு சென்றதற்காக பாஜகவினரால் கண்டிக்கப்பட்டுள்ளார்.

எனினும் தான் நாடாளுமன்றத்தின் மாண்பை பாதுகாக்கும் விதிகளையோ அல்லது பாதுகாப்பு விதிமுறைகளையோ மீறவில்லை எனத் தனது செயலை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ரேணுகா சவுத்ரி
காங்கிரஸ் தலைவர் கார்கே உடன் ரேணுகா சவுத்ரி

என்ன நடந்தது?

ரேணுகா சவுத்ரி காரில் தன்னுடன் கொண்டுவந்த நாய் இன்று காலையில் வழியில் மீட்கப்பட்ட தெருநாய் எனக் கூறியுள்ளார். ANI செய்தி நிறுவனத்தின்படி, அந்த நாய் காருக்குள் இருந்ததாகவும், காங்கிரஸ் எம்.பி.யை நாடாளுமன்றத்தில் கார் இறக்கிவிட்ட சிறிது நேரத்திலேயே அது அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அந்த நாயை ஒரு காரும் ஸ்கூட்டரும் மோதிய போது பார்த்ததாகவும், வேறு வாகனங்களில் அடிபட்டுவிடக் கூடும் என்பதற்காக மீட்டு கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பியை சாடிய பாஜக

நாடாளுமன்ற வளாகத்துக்குள் ஒரு விலங்கைக் கொண்டுவந்ததற்காக காங்கிரஸ் எம்.பி ரேணுகா சவுத்ரியை பாஜகவினர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால், ரேணுகா சவுத்ரி நாடகம் போடுவதாக விமர்சித்ததுடன் முறையான ஆவணங்கள் இல்லாமல் யாரையும் நாடாளுமன்ற வளாகத்துக்குள் அழைத்துவர முடியாது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

Jagdambika Pal
Jagdambika Pal

பிடிஐ செய்தி நிறுவனம் கூறுவதன்படி, “நீங்கள் பிரச்சினைகளை விவாதிப்பதில் தீவிரமாக இல்லை… இப்படிப்பட்ட தமாஷா (நாடகம்) மூலம் நாடாளுமன்றத்தையே கேலி செய்கிறீர்கள்… அவை உறுப்பினர், இதுபோன்ற நாடகங்களில் ஈடுபடுவதற்குப் பதிலாக பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகளை எழுப்ப வேண்டும். இவர் மீது நடவடிக்கை எடுக்க அவைத்தலைவர் வழிவகை செய்ய வேண்டும்” எனப் பேசியுள்ளார் ஜகதாம்பிகா பால்.

பாஜக செய்திதொடர்பாளரான ஷெஹ்சாத் பூனாவாலா, ரேணுகா சவுத்ரி நாயை உள்ளே அழைத்து வந்து எம்.பிக்கள் மற்றும் நாடாளுமன்ற பணியாளர்களை நாயுடன் ஒப்பிட்டு பேசியதாகவும், இது அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு அவமானம் என்றும், காங்கிரஸ் மற்றும் ரேணுகா சவுத்ரி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் பேசியுள்ளார்.

Parliament விதிமுறைகள் சொல்வதென்ன?

நியூஸ்9 தளம் கூறுவதன்படி, நாடாளுமன்ற வளாகத்திற்குள் அங்கீகரிக்கப்படாத எந்தவொரு நபரோ அல்லது பொருளோ அனுமதிக்கப்படமாட்டாது. பாதுகாப்பு பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளின்படி செல்லப்பிராணிகள் தடை செய்யப்பட்டுள்ளன.

தனது செயலை நியாயப்படுத்தும் எம்.பி

எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஆளும் கட்சி விலங்குகளை விரும்பவில்லை என்றும், தெருநாய்களை பாதுகாக்க எந்தவொரு சட்டமும் இயற்றப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார் ரேணுகா சவுத்ரி.

“ஏதாவது சட்டம் இருக்கா? நான் வந்துட்டு இருந்தேன். ஒரு ஸ்கூட்டர் ஒரு கார் மேல மோதிச்சு. இந்த சின்ன நாய்க்குட்டி ரோட்டில் அலைஞ்சுட்டு இருந்தது. அது சக்கரத்துல மோதும்னு நினைச்சேன். அதனால நான் அதை எடுத்துட்டு, காரில் போட்டுட்டு, பாராளுமன்றத்துக்கு வந்து, திருப்பி அனுப்பிட்டேன். கார் போயிடுச்சு, நாயும் போயிடுச்சு. அப்போ இந்த விவாதத்துல என்ன பிரயோஜனம்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அவர்.

தன்னை இறக்கிவிட்ட ஓட்டுநகர் நாயை கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் விளக்கமளித்தார்.

“இந்த அரசாங்கத்திற்கு விலங்குகள் பிடிக்காது. விலங்குகளுக்கு குரல் இல்லை. அது [நாய்] காரில் இருந்தது, அதனால் பிரச்சனை என்ன? அது மிகவும் சிறியது, அதைப் பார்க்க கடிப்பது போல இருக்கிறதா? பாராளுமன்றத்திற்குள் அமர்ந்திருப்பவர்கள் கடிக்கிறார்கள், நாய்கள் அல்ல.” எனப் பேசினார் அவர்.

தன்னை நாய் பிரியராக கூறிக்கொள்ளும் ரேணுகா சவுத்ரி, இதுவரை பல தெரு நாய்களைக் தத்தெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.