புதுடெல்லி,
உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான ரஷியா, இந்தியாவின் முக்கியமான நட்பு நாடாக நீண்ட காலமாக உள்ளது. உலகின் உச்ச தலைவர்களில் ஒருவராக கருதப்படும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடைசியாக கடந்த 2021-ம் ஆண்டு இந்தியா வந்தார்.
இதனிடையே உக்ரைன் மீதான ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக, புதின் மீது சர்வதேச கோர்ட்டு பிடிவாராண்டு பிறப்பித்தது. இதனால் வெளிநாட்டு பயணங்களை தவிர்த்தார். ரஷிய-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அமெரிக்காவில் உள்ள அலாஸ்காவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள கடந்த ஆகஸ்டு மாதம் புதின், அலாஸ்கா சென்றார்.
இந்தநிலையில் டெல்லியில் நடைபெற உள்ள இந்தியா-ரஷியா மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரஷியா அதிபர் புதின், நாளை (வியாழக்கிழமை) இந்தியா வருகிறார். 2 நாள் பயணமாக டெல்லி வரும் புதின், பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதன்பின்னர் பாரம்பரிய விருந்தில் கலந்து கொள்கிறார்.
ரஷிய-இந்திய மாநாட்டின்போது, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் வணிகம், பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த முக்கிய ஆலோசனைகளும் நடைபெற உள்ளன. புதினின் வருகையையொட்டி டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் டெல்லி போலீசாருடன் ராணுவத்தினரும் ஈடுபட்டு வருகிறார்கள்.