முதல் சீசனில் வந்த ‘நெக்லஸ்’ டாஸ்க்கை தூசு தட்டி மறுபடியும் கொண்டு வந்திருக்கிறார் பிக் பாஸ். போட்டியாளர்கள் reckless ஆக இல்லாமல் இருந்தால் சரிதான்.
முக்கோணக் காதல் பிரச்னையை தீர்ப்பதற்காக நடந்த வரலாற்றுச் சந்திப்பு தோல்வியில் முடிந்தது. இது ஜியாமென்ட்ரி பாக்ஸில்கூட அடக்கமுடியாத அளவிற்கு அறுங்கோணமாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளதுபோல. இப்போது அரோரா FJ-வுடன் நெருக்கமாகத் தொடங்கியிருக்கிறாரா?
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 58
பெர்முடா முக்கோண மர்மத்தின் ரகிசயத்தைக்கூட கண்டுபிடித்து முடியும்போல. ஒரு காதலின் முக்கோணச் சிக்கலை அவிழ்ப்பது அத்தனை எளிதல்ல. கமு்மு – அம்மு – பாருவின் சமாதான பேச்சுவார்த்தையின் முதல் கட்டம் தொடங்கியது.

“இந்த டிரையாங்கிள் பிரச்னையை இத்தோட நிறுத்திக்கலாம். எங்க லவ் ரொம்ப ஸ்ட்ராங்கு. நீதான் குறுக்க வர்ற” என்கிற மாதிரி பாரு சொல்ல, “அப்படின்னா கம்முவோட இன்னமும் நான் பிரெண்டா இருக்கறது நல்லாயிரு்ககாது. நீங்க அனுமதி கொடுக்கும்போது மட்டும் பேசணும்னு எனக்கு அவசியமில்ல.” என்று அரோரா சொல்ல “உன் கேமை நீ ஆடு… அவங்கவங்க அவங்க கேமை ஆடலாம்” என்று கம்மு எரிச்சலாக அரோரா கையெடுத்து கும்பிட்டு விட்டுச்சென்றார்.
கடவுள் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட
இந்தப் பிரச்னையைப் புரிந்துகொள்ள முயன்றால்.. பாரு, அரோரா ஆகிய இருவருக்குமே கம்மு என்கிற பொம்மை ஆடுவதற்குத் தேவைப்படுகிறது. இருவருக்குமே அதை விட்டுக்கொடுக்க மனமில்லை. வெளியுலகம் என்றால் சட்டென்று விலகிவிடலாம். ஆனால் பிக் பாஸ் என்கிற அடைபட்ட சூழலில் தனக்கேற்ற comfort zone-ஐ ஒருவர் தேடிக்கொள்வது இயல்பானது. ஆகவே இருவரும் போட்டியிடுகிறார்கள்.
‘எனக்கு ஃபீலீங்க்ஸ் இருக்கு. பொசசிவ் ஆகுது. பிரெண்டா இருக்கட்டும். ஆனா என் கண் முன்னாடி வேணாம்” என்று நிபந்தனையிடுகிறார் பாரு. ‘அப்படிப்பட்ட பிரெண்ட்ஷிப்பே எனக்கு வேணாம்’ என்று உதறிச் செல்கிறார் அரோரா. அப்படிச் சென்றாலும் கலங்காமல் இருக்க அவரால் முடியவில்லை. துஷாரின் இடத்தை கம்முவின் மூலம் ரீபிளேஸ் செய்ய விரும்புகிறாரோ என்று தோன்றுகிறது.
இப்படியாக இரண்டு பெண்கள் ஒரு பொம்மைக்கு சண்டை போட்டுக் கொண்டிருக்க, கம்மு என்கிற பொம்மையோ ‘கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா?’ என்று இரண்டு பக்கமும் கோல் அடிக்க நினைக்கிறது. ரொம்பவும் வற்புறுத்தினால் ‘ஆமாம்.. பாரு மேலதான் ஃபீலிங்க்ஸ்’ என்று அரோரா மீது கோபம் கொள்கிறது.

பிக் பாஸ் வீட்டில் உருவாகும் தற்காலிக காதல்கள்
பிக் பாஸ் வீட்டில் உருவாகிற லவ் டிராக் எல்லாம் அப்போதைய நேரத்திற்கு உருவாகும் தற்காலிக உணர்ச்சி என்பது உலகத்திற்கே தெரியும். அப்படி இருந்தும் கூட கவின் – லோஸ்லியா (3-ம் சீசன்) இருவருக்கு இடையே உண்டான காவியக்காதல் வெளியில் தொடர்ந்து திருமணத்தில் முடியும் என்று ஒரு கணம் நம்பினேன். இதுதான் நிலைமை. மீடியாவில் ஊறியுள்ள பாருவிற்கும் கம்முவிற்கும் இது நன்றாகத் தெரியும். என்றாலும் ‘எனக்கு ஃபீலிங்க்ஸ் அதிகம்’ என்று பாரு வலியுறுத்துவது டிராமா என்றுதான் தோன்றுகிறது.
‘என்னோட வளர்ச்சியைப் பத்தி அரோரா உண்மையாவே கவலைப்படறா. ‘நீ நல்ல நடிகன் ஆகணும்’ன்னு சொல்லி திறமையை வளர்த்துக்கச் சொல்றா. எனக்கு ரெட் கார்டு கிடைக்கும்ன்னு பேசிக்கிட்ட அரோரா அழுதா.. அவதான் எனக்கு உண்மையான பிரெண்டு. ஆனால் பாருவோ அவளைப் பத்திதான் கவலைப்படறா. வம்பு பேசறா’ என்று மிகத் தெளிவாக சொன்னவரும் இதே கம்ருதீன்தான். ஆனால் தனக்கு எது தேவை என்று வரும்போது பாருவின் பக்கம் சாய்கிறார். (கசாப்புக் கடைக்காரனைத்தான் ஆடு நம்பும் என்றொரு பழமொழி இருக்கிறது)
‘அதே டெய்லர்.. அதே வாடகை.. எனக்கும் அதையேதான் சொன்னான்’ என்று அரேரராவிடம் புலம்பிக்கொண்டிருந்தார் ஆதிரை. ‘வெண்மதி வெண்மதியே நில்லு’ என்று டைமிங்கான பாட்டை FJ தலைமையில் ஒரு குழு டைமிங்காக பாட தனியாகச் சென்று கண்கலங்கினார் அரோரா. காமிரா துஷார் படத்தை க்ளோசப்பில் காண்பித்தது.
சான்ட்ராவின் புரியாத கோபம் – எஸ்கேப் ஆன பிரஜன்
நாள் 58. தல ரம்யா அறையில் கனி தூங்கிய விவகாரத்தை துண்டுக் காட்சியாக எதற்கோ காண்பித்தார்கள்.
பாருவும் வியானாவும் பேசிக் கொண்டிருந்தார்கள். “ஒரு பிரண்ட்ஷிப் எப்ப வேணா லவ்வா மாறலாம். அதுல தப்பில்லை. நீங்க பண்றது ரொம்ப வெளிப்படையா தெரியுது” என்று வியானா சொல்ல “நான் நிறைய விட்டுக் கொடுத்திருக்கேன். அவங்க ரெண்டு பேரும் நட்புச் செடியை நல்லாவே தண்ணி விட்டு வளர்க்கட்டும். ஆனா என் கண்ணு முன்னாடி வேணாம். நான் இந்த மாதிரி Evil ஆட்டமெல்லாம் ஆட மாட்டேன்” என்று தன் பொசசிவ்னஸிற்கு சப்பைக்கட்டு கட்டிக் கொண்டிருந்தார் பாரு.

இந்த லவ் டிராக் சிக்கல்தான் இப்படியென்றால், திருமண டிராக்கிலும் ஒரே பிரச்னைதான். சான்ட்ரா எதற்காக கோபமாக இருக்கிறார், அடிக்கடி தனிமையில் அமர்ந்து கொள்கிறார் என்கிற ரகசியத்தை அறிய முடியவில்லை.
“ஒருவேளை அவளுக்கு நான் ரெட் பேட்ஜ் கொடுத்துது காரணமா இருக்கலாம். தெரியல. அப்படியே விட்ரு. நான் சக போட்டியாளர்தான். இதையெல்லாம் விசாரிக்க முடியாது” என்று திவ்யாவிடம் ஜாக்கிரதையாகச் சொன்னார் பிரஜன். ஆனால் திவ்யாவோ “ அவ கிட்ட பேசவே பயமா இருக்குது. இருந்தாலும் போய்க் கேட்டுட்டு வரேன்’ என்று வம்படியாக கிளம்பிச் சென்றார்.
‘ரெண்டு ரூவாதாண்டா கேட்டேன். அவன் என்ன கோபத்துல இருந்தானோ. தெரியல.. இவ்ளோ பெரிய கத்திய உருவிட்டான்’ என்கிற வடிவேலு காமெடி மாதிரி, திவ்யா அருகில் வந்ததுமே படபடவென பொறிய ஆரம்பித்துவிட்டார் சான்ட்ரா. “எனக்கு நூறு பிரச்னை இருக்கும். அதையெல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.. எங்க அப்பா செத்த மாசம் இது. உனக்கு தெரியாம இருக்கலாம். அவருக்கு தெரியாதா.. இப்ப நான் என்ன பண்ணணும்..?” என்றெல்லாம் சான்ட்ரா எரிந்து விழ ‘தப்பிச்சோம்டா சாமி’ என்று எழுந்து வந்தார் திவ்யா.
பெண்களின் குறிப்பான மனைவிமார்களின் கோபத்திற்கான காரணத்தை அறிவது பிரம்ம சூத்திரம். காரணத்தை வெளிப்படையாகச் சொல்லியும் தொலைக்க மாட்டார்கள். விசாரிக்க அருகில் சென்றாலும் மேலே பாய்ந்து பிடுங்குவார்கள். ஆனால் பிரஜின் ரொம்பவும் அனுபவஸ்தராக இருக்கிறார். “இப்ப வேணாம் விட்ரு. பார்த்துக்கலாம். வண்டி தானா வரட்டும்’ என்று சாமர்த்தியமாக டீல் செய்கிறார்.

பிரஜனும் திவ்யாவும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதால் சான்ட்ராவிற்கு பொசசிவ் ஏற்படுகிறதா, அல்லது பிரஜன் சொன்னது மாதிரி ‘ரெட் பேட்ஜ்’தான் பிரச்னையா? சான்ட்ராவிற்கே வெளிச்சம். ‘பிரஜின் எவிக்ஷன்’ என்னும் போது ஊரையே கூட்டி அழுது அலப்பறை செய்த சான்ட்ரா, இப்போது கோபத்தையும் அதே அளவிற்கான மீட்டரில் காட்டுகிறார். எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரீம் என்றால் எப்படி?
‘சான்ட்ராவுடன் உறவு துண்டிப்பு’ என்று டாஸ்க்கின்போது பிரஜின் சொல்ல “அப்புறம் உங்க நிலைமை என்ன ஆகப் போகுதோ?’ என்று விசே கிண்டலடித்தது உண்மையாகிக் கொண்டிருக்கிறது.
‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ – திவாகரைப் பிரிய மனமில்லாத பிக் பாஸ்
வீக்லி டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். ‘ஜமீன்தாரும் நெக்லஸூம்’ என்பது தலைப்பு. ஜமீன்தாரின் பெயர் ‘நடிப்புராய தர்பூஸ்ராஜா’ வாம். திவாகர் வெளியே சென்றாலும்கூட இவர்கள்விட மாட்டார்கள் போலிருக்கிறது. ‘பாருங்க.. தமிழக மக்களே.. என் பெயராலதான் பிக் பாஸ் வண்டி ஓடுது’ என்று அவர் பெருமிதமாக இண்டர்வியூவில் சொல்லப்போகிறார்.
‘ரெட்ரோ சினிமா’, ‘மாடர்ன் சினிமா’ என்று வீடு இரண்டு அணிகளாகப் பிரியும். ஜமீன்தார் தந்து விட்டுச் சென்றிருக்கும் நெக்லஸூகளை இரண்டு அணிகளும் பாதுகாக்க வேண்டும். நெக்லஸை தொலைக்கும் அணி ஒட்டுமொத்தமாக நாமினேஷன் ஆகும். வெற்றி பெறும் அணி நாமினேஷன் ப்ரீ பாஸ் வெல்லும்.

ஒவ்வொருவரின் சினிமா கேரக்டர்கள் தரப்பட்டன. ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதவாக விக்ரம், வசந்தமாளிகை சரோஜாதேவியாக ‘கனி’, இதே படத்தின் சிவாஜியாக ஆதிரை, திருவிளையாடல் தருமியாக சுபிக்ஷா, பிராமண வீட்டுப் பெண்ணாக அரோரா, கர்ணன் சிவாஜியாக அமித், ‘தில்லானா மோகனாம்பாள்’ பத்மினியாக திவ்யா, இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கமாக பிரஜின், முதல் மரியாதை ராதா (?!) வாக வியானா, ரெமோ நர்ஸ் ஆக கம்ருதீன், நத்தக்கண்ணுவாக பாரு, (என்னடா பேரு இது?) டி.ஆர் ஆக வினோத், மதராசப் பட்டினம் எமி ஜாக்ஸனாக சான்ட்ரா, வல்லவன் சிம்புவாக FJ, குணா அபிராமியாக சபரி.
டி.ஆர் பாத்திரம் என்று அறிவிக்கப்பட்டதுமே அந்த மோடில் மாறி ரைமிங்கில் அலப்பறையைத் தொடங்கிவிட்டார் வினோத். தனக்கு தரப்பட்ட விக்கை மாட்டிக் கொண்டு ‘என்னடா.. இது ஓலைக்குடிசைக்குள்ள வாழற மாதிரி இருக்கு’ என்று சொன்னது நல்ல நகைச்சுவை. ‘சும்மாவே பேசுவான்.. இப்ப இந்த காரெக்டர் வேறயா?” என்று மற்றவர்கள் ஜாலியாக சலித்துக்கொண்டார்கள்.
ஒவ்வொருவரும் தங்களின் காரெக்ட்டரில் கோரஸாக கத்திக்கொண்டிருந்தார்கள். அப்போதும்கூட அரோராவும் பாருவும் தங்களின் ‘ஃபீலிங்’ சண்டையை ஜாடையாக நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். பாருவின் கணவர் பெயர் சக்திவேல் கம்ருதீனாம். காரெக்டர்லகூட ரொமான்ஸை சேர்க்கிற அளவிற்கு ஃபீலிங்க்ஸ் டெவலப் ஆகியிருக்கிறது. ‘சதி லீலாவதி’ கோவை சரளாவின் காரெக்டரை காப்பி செய்ய முயன்று கொண்டிருந்தார் பாரு.

காய்கறிகளை மேஜையில் அடுக்கி வைத்து, கண்ணைக் கட்டிக்கொண்டு கண்டுபிடிக்கிற டெய்லி டாஸ்க்கை ஆரம்பித்தார் பிக் பாஸ். சான்ட்ராவிற்கும் அமித்திற்கும் நடந்த முதல் சுற்றில், பார்வதி கத்திக் கொண்டேயிருந்ததால் அமித் கோபம் அடைந்தார்.
ஒவ்வொருவருக்கும் சுவாரசியமான கேரக்டர்கள் தரப்பட்டிருக்கின்றன. இதை வைத்து டாஸ்க்கை சிறப்பாகச் செய்து நடிப்பு அரக்கனின் பெயரைக் காப்பாற்றுவார்களா?