புதுடெல்லி,
ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி விராட் கோலியின் சதம் (135 ரன், 120 பந்து, 11 பவுண்டரி, 7 சிக்சர்), ரோகித் சர்மா (57 ரன்), கேப்டன் கே.எல். ராகுல் (60 ரன்) ஆகியோரது அரைசதங்களால் 8 விக்கெட்டுக்கு 349 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 332 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்த நிலையில், வருகிற 24-ந்தேதி உள்நாட்டில் தொடங்கும் விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட விராட் கோலி முடிவு செய்துள்ளார். டெல்லி அணிக்காக ஆடுவதை உறுதிப்படுத்தியுள்ள அவர் எத்தனை ஆட்டங்களில் ஆடுவார் என்பது தெளிவாக தெரியவில்லை என டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ரோஹன் ஜெட்லி தெரிவித்தார். கோலி, 2010-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக விஜய் ஹசாரே போட்டியில் ஆட உள்ளார்.