ஐபிஎல் ஏல வரலாற்றை திரும்பி பார்க்கும்போது, மெகா ஏலத்தை விட மினி ஏலங்களில் தான் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போயிருக்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மையாகும். ஒவ்வொரு ஆண்டும் மினி ஏலத்தில் கோடிகளை கொட்டி அணிகள் முக்கிய வீரர்களை வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. கெவின் பீட்டர்சன் முதல் மிட்செல் ஸ்டார்க் வரை இந்த விலை உயர்ந்த பட்டியலில் இடம் பிடித்தவர்கள் ஏராளம். அந்த வகையில், வரவிருக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் புதிய வரலாற்று சாதனையை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அணிகள் தங்களிடம் உள்ள குறைவான இடங்களை நிரப்பவும், அணியின் பலத்தை அதிகரிக்கவும் மினி ஏலத்தில் பணத்தை வாரி இறைக்க தயங்குவதில்லை. கடந்த காலங்களில் மினி ஏலம் எப்படி சில வீரர்களின் வாழ்க்கையை மாற்றியது என்பதை பார்ப்போம்.
Add Zee News as a Preferred Source

ஆரம்ப கால அதிரடிகள் (2009 – 2013)
2009-ம் ஆண்டு நடைபெற்ற மினி ஏலத்தில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாஃப் ஆகியோர் தலா ரூ.9.8 கோடிக்கு ஏலம் போய் முதலிடத்தை பிடித்தனர். இது ஐபிஎல் வரலாற்றில் மிக முக்கிய தருணமாக பார்க்கப்பட்டது. 2010ல் பொல்லார்ட் மற்றும் ஷேன் பாண்ட் ஆகியோர் ரூ.4.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2012-ல் சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜாவை தக்கவைக்க ரூ.12.8 கோடியை செலவழித்தது, ஒரு ஆல்ரவுண்டருக்கான தேவையை உணர்த்தியது. 2013-ல் மும்பை இந்தியன்ஸ் அணி மேக்ஸ்வெல்லை ரூ.6.3 கோடிக்கு வாங்கியது.
சாதனை படைத்த இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள்
2015-ல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி யுவராஜ் சிங்கை ரூ.16 கோடிக்கு வாங்கியது அப்போது மிகப்பெரிய சாதனையாக பேசப்பட்டது. ஒரு இந்திய வீரர் மீது அணிகள் வைத்திருந்த நம்பிக்கையை இது காட்டியது. 2017-ல் ரைசிங் புனே சூப்பர்ஜெயண்ட்ஸ் அணி பென் ஸ்டோக்ஸை ரூ.14.5 கோடிக்கு வாங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 2019-ல் வருண் சக்கரவர்த்தி மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் தலா ரூ.8.4 கோடிக்கு ஏலம் போயினர். இது உள்ளூர் திறமைக்கும், அனுபவத்திற்கும் கொடுக்கப்பட்ட அங்கீகாரமாக அமைந்தது.
எகிறிய ஏல தொகைகள் (2020 – 2024)
சமீபத்திய ஆண்டுகளில் ஏல தொகை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
2020: பாட் கம்மின்ஸ் (கேகேஆர்) – ரூ.15.5 கோடி.
2021: கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்) – ரூ.16.25 கோடி.
2023: சாம் கரன் (பஞ்சாப் கிங்ஸ்) – ரூ.18.5 கோடி.
2024: மிட்செல் ஸ்டார்க் (கேகேஆர்) – ரூ.24.75 கோடி.
மிட்செல் ஸ்டார்க் வாங்கிய இந்த தொகை ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகபட்சமாகும். இது வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு எந்த அளவுக்கு அதிகரித்துள்ளது என்பதை காட்டுகிறது. வரவிருக்கும் 2026 ஐபிஎல் மினி ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் இளம் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் மீது அனைவரின் பார்வையும் திரும்பியுள்ளது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்றிலும் கலக்கக்கூடிய இவரை வாங்க அணிகள் போட்டி போடும் என்று தெரிகிறது. மிட்செல் ஸ்டார்க்கின் சாதனையை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் போகும் வீரராக கேமரூன் கிரீன் மாறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
About the Author
RK Spark