“ஆந்திராவின் எஸ்.பி.பி-க்கு தெலங்கானாவில் எதற்கு சிலை" – எதிர்க்கும் சமூக ஆர்வலர்; விவரம் என்ன?

தமிழ் சினிமா, தென்னிந்திய சினிமா என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலும் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பின்னணி பாடகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர்.

ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தில் கொனேதம்மாபேட்டாவில் 1946 ஜூன் 4-ம் தேதி பிறந்த இவர், தென்னிந்திய மொழிகள், ஹிந்தி மொழி உட்பட மொத்தம் 16 மொழிகளில் 40,000-க்கும் மேற்பட்ட பாடல்களைத் தனது வாழ்நாளில் பாடியிருக்கிறார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
எஸ்.பி.பாலசுப்ரமணியம்

தான் பிறந்த மாநிலமான ஆந்திராவில் மாநில அரசின் தெலுங்கு சினிமா விருதை 25 முறை வென்றிருக்கிறார்.

தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநில அரசுகளின் திரைத்துறை விருதுகளையும் வென்றிருக்கிறார்.

6 முறை தேசிய விருது வென்றிருக்கும் எஸ்.பி. பாலசுப்ரமணியம், மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம ஸ்ரீ (2001), பத்ம பூஷன் (2011) ஆகிய விருதுகளைப் பெற்றார்.

எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி
எஸ்.ஜானகி, மற்றும் எஸ்.பி.பி

2020 செப்டம்பர் 25-ம் தேதி கொரோனா தொற்றால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். அதற்கடுத்த ஆண்டு மத்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது அறிவித்து அவரைக் கௌரவித்தது.

மேலும், தமிழக அரசு கடந்த ஆண்டு அவரின் நினைவு நாளில், அவர் இறுதி மூச்சுவரை வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் வீதிக்கு ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலை’ எனப் பெயர் மாற்றியது.

இவ்வாறிருக்க, இந்திய சினிமா மற்றும் இசைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக அவரைக் கௌரவிக்கும் வகையில் தெலங்கானா அரசு அவருக்கு சிலை அமைத்திருக்கிறது.

இந்தச் சிலையானது தெலங்கானாவின் பிரபல கலாச்சார மையமான ரவீந்திர பாரதி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது.

சிலையை டிசம்பர் 15-ம் தேதி முதல்வர் ரேவந்த் ரெட்டி திறந்து வைக்கவிருக்கிறார்.

இந்த நிலையில், தெலங்கானாவின் சமூக ஆர்வலர் பிரித்விராஜ் யாதவ் என்பவர் அரசின் இந்த முடிவை எதிர்த்திருக்கிறார்.

நேற்றைய தினம் (டிசம்பர் 2) ரவீந்திர பாரதி வளாகத்தில் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மைத்துனரும் நடிகருமான சுபாலேகா சுதாகரிடம் பிரித்விராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிவருகிறது.

ஆந்திராவைச் சேர்ந்த புகழ்பெற்ற நபருக்கு தெலங்கானா கலாச்சார மையத்தில் எதற்கு சிலை எனக் கேள்வியெழுப்பும் பிரித்விராஜ், கத்தார் (Gaddar) மற்றும் ஆண்டே ஸ்ரீ (Ande Sri) போன்ற தெலங்கானா முக்கிய ஆளுமைகளை அரசு கௌரவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும் தனியார் ஊடகத்திடம், “அவரது சிலை இங்கு நிறுவ வேண்டிய அவசியமில்லை. தெலங்கானாவில் பிறந்த பல முக்கிய நபர்கள் இருக்கின்றனர். அவர்களின் சிலைகளை நிறுவ வேண்டும்.

தெலங்கானா மாநில பாடலைப் பாடுமாறு அவரிடம் கேட்டபோது, ​​அவர் மறுத்துவிட்டார். எனவே, அவரின் சிலை இங்கு நிறுவப்பட்டால், விளைவுகள் கடுமையாக இருக்கும்” என்று பிரித்விராஜ் கூறியிருக்கிறார்.

இதனால், தெலங்கானாவில் இந்த விவகாரம் பேசுபொருளாகியிருக்கிறது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.