திருப்பரங்குன்றம்: மலை உச்சியில் ஏற்றப்படாத தீபம்; வெடித்த ஆர்ப்பாட்டம், 144 தடை; நிலவரம் என்ன?

திருப்பரங்குன்ற மலையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு மேல் மலையில் இருக்கும் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்தது. மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்து அமைப்பான இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், இந்த ஆண்டு திருப்பரங்குன்ற மலையில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை மகாதீபம் ஏற்ற அனுமதி வழங்குமாறு வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், “தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு, கார்த்திகை தீபம் மலை உச்சியிலும் ஏற்றலாம்” என்று கடந்த டிசம்பர் 1ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

திருப்பரங்குன்றத்தில் உச்சி பிள்ளையார் கோவிலில் ஏற்றப்பட்ட மகாதீபம்

மலை உச்சி தீபத்தூண் அருகே 50 மீட்டர் தொலைவில் இஸ்லாமியர்கள் வழிபடும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகில் இருப்பதால் அங்கு தீபம் ஏற்றும்போது, சமூக அமைதி சீர் கெடுவதற்கு வாய்ப்பிருப்பதாக சமூக ஆர்வலர்கள் இந்த நீதிமன்ற தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கூறிவந்தனர்

மேலும், “சிக்கந்தர் தர்காவிற்கு அருகே கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டாம், வழக்கமாக கடந்த பல ஆண்டுகளாக தீபம் ஏற்றப்பட்டு வந்த உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் தீபம் ஏற்றுவதே மதநல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்” என்று கூறிவந்தனர்.

இந்த அடிப்படையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து, இந்து சமய அறநிலையத்துறை மேல்முறையீட்டை நேற்றே தாக்கல் செய்திருந்தது. இதுதொடர்பாக இன்று இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

காவல்துறை - ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளு முள்ளு
காவல்துறை – ஆர்ப்பாட்டக்காரர்கள் தள்ளு முள்ளு

நீதிமன்ற உத்தரவின் படி இந்து அமைப்பினரும் மலை உச்சியில் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்ற ஏற்பாடுகள் செய்தனர்.

இருப்பினும், திருப்பரங்குன்ற அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகத்தினர் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்றாமல், வழக்கம்போல கடந்த பல ஆண்டுகளாக ஏற்றப்பட்டுவந்த கோவிலுக்கு மேலே இருக்கும் மலையில் உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றியுள்ளனர்.

நீதிமன்றம் மலை உச்சியில் இருக்கும் சிக்கந்தர் தர்காவிற்கு அருகே இருக்கும் தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற அனுமதி கொடுத்தும், கோவில் நிர்வாகத்தினர் வழக்கம்போல உச்சிப் பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சில இந்து அமைப்பினர் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனால் காவல்துறை, ஆர்ப்பாட்டக்காரர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரார்கள் தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கிடையில் அத்துமீறி உச்சி மலையை நோக்கி சென்றவர்கள் தடுக்கப்பட்டு வந்தனர்.

திருப்பரங்குன்றம்

இந்த பதற்றமான சூழலில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தனது உத்தரவின்படி தீபம் ஏற்றப்படாத நிலையில், உயர் நீதிமன்றத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள CISF வீரர்களை கூட்டிக் கொண்டு மனுதாரர் தீபம் ஏற்றச் செல்லாம்” என்று கூறியிருக்கிறார்.

இந்த உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே கார்த்திகை தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரரான இந்து மக்கள் கட்சி தரப்பு புறப்பட்டிருக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை உள்ளிட்ட சுற்றுப் பகுதிகள் போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து முன்னணி, இந்து தமிழர் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்பினர் அதிதீவிரம் காட்டி வருவதால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

திருப்பரங்குன்றம் பகுதியில் நிலவும் இந்த அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.