ஐந்து முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), கடந்த 2025 சீசனில் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்து ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்த சரிவிலிருந்து மீண்டு வரவும், அணியை மீண்டும் வலுவான நிலைக்கு கொண்டு வரவும் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வரும் டிசம்பர் 16-ம் தேதி அபுதாபியில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2026-க்கான மினி ஏலத்தில், சென்னை அணி யாரையெல்லாம் குறிவைக்கப்போகிறது என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் தற்போதைய விவாதமாக உள்ளது.
Add Zee News as a Preferred Source

ஏல களம் மற்றும் கையிருப்பு தொகை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கைவசம் தற்போது ரூ.43.40 கோடி மீதமுள்ளது. இந்த தொகையை கொண்டு அணியின் பலவீனமான இடங்களை சரிசெய்ய நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, கடந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் காணப்பட்ட சறுக்கல்களை சரிசெய்ய, சில முக்கிய ஆல்ரவுண்டர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.
சிஎஸ்கே குறிவைக்க வாய்ப்புள்ள 5 முக்கிய வீரர்கள்:
வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer): கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் நட்சத்திரமான வெங்கடேஷ் ஐயர், கடந்த காலங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஒரு இடது கை பேட்ஸ்மேனாகவும், மிதவேக பந்துவீச்சாளராகவும் செயல்படும் இவர், சென்னை அணியின் டாப் ஆர்டருக்கு பெரும் பலம் சேர்ப்பார். ராயுடுவின் ஓய்வுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப இவர் சரியான தேர்வாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வனிந்து ஹசரங்கா (Wanindu Hasaranga): இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹசரங்கா, சேப்பாக்கம் மைதானத்தின் ஆடுகளத் தன்மைக்கு மிகவும் பொருத்தமானவர். மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும், கடைசி நேரத்தில் அதிரடியாக ரன் குவிக்கும் ஆற்றலும் அவரிடம் உள்ளது. ஜடேஜாவின் இடத்தை நிரப்பி எதிரணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க முடியும்.
கேமரூன் கிரீன் (Cameron Green): ஆஸ்திரேலியாவின் இந்த இளம் ஆல்ரவுண்டர், ஐபிஎல் அரங்கில் ஏற்கெனவே தனது முத்திரையை பதித்துள்ளார். உயரமான இவர், பவுன்சர் பந்துகளை வீசுவதிலும், இக்கட்டான நேரங்களில் சிக்ஸர்களை பறக்கவிட்டு ரன் குவிப்பதிலும் வல்லவர். மொயின் அலி அல்லது மிட்செல் சாண்ட்னருக்கு மாற்றாக ஒரு வலுவான வெளிநாட்டு ஆல்ரவுண்டரை தேடும் சிஎஸ்கேவுக்கு, கிரீன் ஒரு சிறந்த சொத்தாக இருப்பார்.
மதீஷா பதிரனா (Matheesha Pathirana): “குட்டி மலிங்கா” என்று அன்போடு அழைக்கப்படும் பதிரனா, ஏற்கெனவே சென்னை அணிக்காக விளையாடி தோனியின் நம்பிக்கையை பெற்றவர். கடந்த சீசனில் காயங்கள் காரணமாக அவர் முழுமையாக பங்களிக்க முடியாமல் போனது அணியின் பந்துவீச்சை பாதித்தது. டெத் ஓவர்களில் யார்க்கர்களை வீசி எதிரணியை திணறடிக்கும் இவரது திறமை சென்னை அணிக்கு மீண்டும் தேவைப்படுகிறது. எனவே, அவரை எப்படியாவது மீண்டும் அணிக்குள் கொண்டு வர சிஎஸ்கே முயற்சிக்கும்.
லியாம் லிவிங்ஸ்டோன் (Liam Livingstone): இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரரான லிவிங்ஸ்டோன், எந்த பந்துவீச்சாளரையும் மைதானத்திற்கு வெளியே அடிக்கும் திறன் கொண்டவர். டி20 கிரிக்கெட்டில் ஒரு முழுமையான பேக்கேஜாக திகழும் இவர், சுழற்பந்து வீச்சையும் சிறப்பாக கையாள்வார். டாப் ஆர்டர் அல்லது மிடில் ஆர்டர் என எங்கு இறங்கினாலும் அதிரடி காட்டக்கூடியவர்.
About the Author
RK Spark