திருப்பரங்குன்றம்: “நீதிமன்ற உத்தரவை இந்து விரோத திமுக அரசு செயல்படுத்த வேண்டும்" – அண்ணாமலை

வருடந்தோறும் கார்த்திகை தீபம் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும் உச்சிப் பிள்ளையார் கோயிலின் தீபத் தூணில் நேற்று (டிசம்பர் 3) தீபம் ஏற்றப்பட்டது.

ஆனால், இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில், “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டதன்படி மலை உச்சியில் தீபம் ஏற்றப்படவில்லை.

இதனால், அப்பகுதியில் பா.ஜ.க, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவே நேற்றிரவு பதட்டம் ஏற்றப்பட்டது.

திருப்பரங்குன்றம்
திருப்பரங்குன்றம்

உடனடியாக மாவட்ட ஆட்சியர் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தார். அதோடு, நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது.

அதனை இன்று விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு, அரசின் மனுவைத் தள்ளுபடி செய்து, நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனே இவ்வழக்கை மீண்டும் விசாரிக்கத் தீர்ப்பளித்தது.

அதன்படி இன்று மாலை விசாரணையைத் தொடங்கிய நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் 144 தடை உத்தரவை ரத்து செய்து, “இன்றே மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு காவல்துறை ஆணையர் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக நாளை அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார்.

இதனால், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றக்கோரி பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச். ராஜா உட்பட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

இந்த நிலையில், போலீஸின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் பா.ஜ.க முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, நீதிமன்ற உத்தரவுகளை தி.மு.க அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியிருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அண்ணாமலை, “இந்து விரோத திமுக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் மலையில் பக்தர்கள் புனித கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்து, நீதிமன்ற உத்தரவை மீண்டும் ஒருமுறை வேண்டுமென்றே மீறியிருக்கிறது.

அதே வேளையில், பா.ஜ.க மாநில நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச். ராஜா மற்றும் பிற நிர்வாகிகளை கைது செய்ததற்காக தமிழக காவல்துறையை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும். இந்து விரோத தி.மு.க அரசு நீதிமன்றத்தின் உத்தரவுகளை மேலும் மீறாமல் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.