சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சிக்ஸர்களை விளாசிய வீரர் என்ற இமாலய சாதனையை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்துள்ளார். பாகிஸ்தான் ஜாம்பவான் ஷாகித் அப்ரிடியின் நீண்டகால சாதனையை தகர்த்தெறிந்துள்ள ரோஹித், தற்போது சிக்ஸர் கிங் ஆக மகுடம் சூடியுள்ளார். ஆனால், உலகையே தனது அதிரடியால் மிரட்டும் ரோஹித் ஷர்மாவால், ஒரு குறிப்பிட்ட பந்துவீச்சாளரின் பந்துவீச்சில் மட்டும் இதுவரை ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை என்பது பலருக்கும் தெரியாத ஆச்சரியமான உண்மையாகும். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், ரோஹித் ஷர்மா தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் அவர் விளாசிய 3 பிரம்மாண்ட சிக்ஸர்கள் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
Add Zee News as a Preferred Source

அப்ரிடியின் 15 ஆண்டுக்கால சாதனை முறியடிப்பு
கடந்த 15 ஆண்டுகளாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற பெருமை பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி வசமே இருந்தது. தற்போது தனது 38-வது வயதில் ரோஹித் ஷர்மா இந்த சாதனையை முறியடித்துள்ளார்.
புதிய சிக்ஸர் நாயகன்: ரோஹித் ஷர்மா – 352 சிக்ஸர்கள் (இதுவரை).
இரண்டாம் இடம்: ஷாஹித் அப்ரிடி – 351 சிக்ஸர்கள்
மூன்றாம் இடம்: கிறிஸ் கெயில் – 331 சிக்ஸர்கள்
நான்காம் இடம்: சனத் ஜெயசூர்யா – 270 சிக்ஸர்கள்
ஐந்தாம் இடம்: எம்.எஸ். தோனி – 229 சிக்ஸர்கள்
ரோஹித்தின் இந்த சாதனை பயணம் மிகவும் பிரம்மாண்டமானது. குறிப்பாக, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மட்டும் அவர் அதிகபட்சமாக 93 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். மேலும், 2023-ம் ஆண்டில் மட்டும் 67 சிக்ஸர்களை விளாசி, ஒரு காலண்டர் ஆண்டில் அதிக சிக்ஸர் அடித்தவர் என்ற சாதனையையும் தன்வசம் வைத்துள்ளார். உலக கோப்பை வரலாற்றிலும் அதிக சிக்ஸர்கள் (54) அடித்த வீரர் இவரே.
சிக்ஸர் மழைக்கு தப்பிய ஒரே பந்துவீச்சாளர்
வேகப்பந்து வீச்சில் 232 சிக்ஸர்களும், சுழற்பந்து வீச்சில் 120 சிக்ஸர்களும் விளாசி தள்ளிய ரோஹித் ஷர்மா, தனது 277 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் பயணத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டுள்ளார். ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் மார்லன் சாமுவேல்ஸ் (Marlon Samuels) வீசிய பந்துகளில் மட்டும் ரோஹித்தால் இதுவரை ஒருமுறை கூட சிக்ஸர் அடிக்க முடியவில்லை. புள்ளிவிவரங்களின்படி, ரோஹித் ஷர்மா மார்லன் சாமுவேல்ஸ் வீசிய 100-க்கும் மேற்பட்ட பந்துகளை சந்தித்துள்ளார். உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களை எல்லாம் மைதானத்திற்கு வெளியே விரட்டியடித்த ரோஹித்தால், பகுதிநேர பந்துவீச்சாளரான சாமுவேல்ஸின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியாதது கிரிக்கெட் உலகின் விசித்திரமான முரண்.
தற்போது மார்லன் சாமுவேல்ஸ் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், இந்த ‘சிக்ஸர் அடிக்காத’ வரலாற்றை ரோஹித்தால் இனி எப்போதும் மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் விளையாடிய விராட் கோலி (159 சிக்ஸர்கள்) மற்றும் ஜாஸ் பட்லர் (182 சிக்ஸர்கள்) ஆகியோர் ரோஹித்தின் இந்த சாதனையை நெருங்க இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. எனவே, இன்னும் பல ஆண்டுகளுக்கு ‘சிக்ஸர் கிங்’ அரியணையில் ரோஹித் ஷர்மாவே நீடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.
About the Author
RK Spark