ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் கிழக்கு மலையில் உள்ள ஈரட்டி, கடை ஈரட்டி, ஒந்தனை உள்ளிட்ட வனப் பகுதிகளில் யானைகள், காட்டுப் பன்றி, சிறுத்தை என வனவிலங்குகள் ஏராளமாக உள்ளன. இரவு நேரத்தில் உணவுதேடி வனத்திலிருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விவசாய நிலத்தில் பயிரிட்டுள்ள மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு மற்றும் தென்னமரங்களை சேதப்படுத்தி சாப்பிட்டு வந்தன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் வனத்துறையினரிடம் புகார் கூறியதால், விவசாய நிலத்துக்குள் நுழையும் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர். பயிர்களை வன விலங்குகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க வனத்துறை அனுமதியுடன் ஒருசில விவசாயிகள் பேட்டரி மின்வேலி அமைத்துள்ளனர். ஆனால், அந்த பேட்டரி மின்வேலியையும் யானைகள் உடைத்து சேதப்படுத்துவதால், சிலர் சட்டவிரோதமாக வேலியில் நேரடியாக மின்சாரத்தை இணைக்கவும் செய்து வருகின்றனர். இதனால், உணவுதேடி விவசாய நிலத்துக்குள் நுழையும் வனவிலங்களுகள் உயிரிழக்கும் நிலையும் உள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை இரவு, ஈரட்டி வனப் பகுதியிலிருந்து வெளியேறிய சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று வைரவன் என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்துக்குள் நுழைந்துள்ளது. அப்போது, அந்த விவசாய தோட்டத்தைச் சுற்றி வைரவன் வைத்திருந்த மின் வேலியில் சிக்கி அந்த யானை உயிரிழந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு, பர்கூர் வன அலுவலர்கள் மற்றும் மின்வாரிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, அதே இடத்தில் யானையை பிரேதப் பரிசோதனை செய்து புதைக்கப்பட்டது. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், “உணவுதேடி வந்த யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக விவசாய நிலத்தின் உரிமையாளர் வைரவனைப் பிடித்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.