விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு காவல்துறையினரால் சுமார் 10 ஆண்டுகளில் வெறும் 106 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை (ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை) என்பது தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதைத் தடுத்திடவும், ஊழலில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து வழக்குப் பதிவு செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரும் உச்சபட்ச அமைப்பாகும் இது.
மேலும், அரசு துறைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் குறித்து புகார்கள் வந்தால், அதனை உரிய முறையில் விசாரணை செய்வதோடு, லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், ஊழலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

ஆனால், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மிகக் குறைவான அளவே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆதாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
பத்திரப் பதிவுத்துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், வருமான வரித்துறை, வணிகவரித்துறை, காவல் நிலையங்கள் என அரசுத்துறை சார்ந்த பகுதிகளில் நீக்கமற லஞ்சம் பெருகியுள்ளதாக பொது மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளியான தகவல்கள்
இந்தநிலையில், 10 ஆண்டுகளில் 106 வழக்குகள் மட்டுமே பதிவானதாக வந்த தகவலால் சமூக ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். விருதுநகரைச் சேர்ந்த உமாராணி என்பவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பல தகவல்களைக் கேட்டிருந்தார்.
அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலகத்திலிருந்து பதில் வந்துள்ளது. அதில், விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 2014 முதல் தற்போது வரை எத்தனை லஞ்சம் மற்றும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற கேள்விக்கு, 106 வழக்குகள் எனப் பதில் வழங்கப்பட்டுள்ளது.
எத்தனை பேர் தண்டனை பெற்றுள்ளனர் எனக் கேட்டதற்கு, 29 வழக்குகளில் 46 பேர் மட்டுமே தண்டனை பெற்றுள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘விருதுநகர் நகராட்சியில் 2014-15 இல் சாலை அமைப்பதில் ஊழல் ஏதும் நடைபெற்றதா? அதில் யாருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளதா?’ என்ற கேள்விக்கு, ‘குற்ற வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை. முதல்நிலை விசாரணை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டது’ எனத் தெரிவித்துள்ளனர்.
எனவே, லஞ்சம், ஊழல் தடுப்பு தொடர்பாகப் போதிய விழிப்புணர்வு பிரசாரத்தை அரசு தரப்பில் ஏற்படுத்த வேண்டும். அரசுத் திட்டங்கள் மற்றும் நோக்கங்கள் குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பொது மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
லஞ்சம் தொடர்பான புகார்களை அளிப்போருக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும் எனப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.