வெலிங்டன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்றுள்ள 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இந்த 2 போட்டிகளிலும் இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி சதமடித்து அசத்தியுள்ளார். மறுபுறம் மற்றொரு முன்னணி வீரரான ரோகித் சர்மா முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அபாரமாக ஆடி தொடர் நாயகன் விருது வென்று அசத்தினார்.
முன்னதாக விராட் மற்றும் ரோகித் இருவரும் டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாட முடிவு செய்திருக்கின்றனர். ஆனால் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடும் அவர்களால் உடல் தகுதியை தக்கவைத்து அதுவரை சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
அந்த சூழலில் தற்போது விராட் கோலியும், ரோகித் சர்மாவும் ஒருநாள் கிரிக்கெட்டில் ரன் குவிக்க தொடங்கி விட்டனர். இதனால் 2027-ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர்களுக்கு இடம் உண்டா? என்ற விவாதம் இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விராட்கோலி யும், ரோகித் சர்மாவும் 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்று நியூசிலாந்து முன்னாள் வீரர் டிம் சவுதி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “விராட் கோலி ஒருநாள் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகிறார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் சதம் அடித்தார். இருவரும் அணிக்கு பங்களிக்கும் வரை ஆட வேண்டும். வயது என்பது ஒரு எண் மட்டுமே என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்.