திருமண வயதை எட்டவில்லை என்றாலும் இரண்டு வயதுவந்த நபர்கள் மனம் விரும்பி ‘லிவ்-இன்’ உறவில் (Live-in Relationship) வாழ்வது அவர்களின் அரசியலமைப்புச் சட்ட உரிமை என ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பேசுப்பொருளாகியிருக்கிறது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம்பெண்ணும் 19 வயது இளைஞரும் தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அனுப் தாண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்.

அவர்களது மனுவில், கடந்த அக்டோபர் 27, 2025 அன்று தாங்கள் ஒரு ‘லிவ்-இன்’ ஒப்பந்தத்தை செய்துகொண்டதாகவும், அதன்படி சுயமாக விரும்பி ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இந்த உறவுக்குப் பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், தங்களைக் கொலை செய்வதாக அச்சுறுத்துவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இது குறித்து கோட்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுவை எதிர்த்து வாதிட்ட அரசு வழக்கறிஞர் விவேக் சௌத்ரி, “ஆணுக்குரிய திருமணத்தின் குறைந்தபட்ச சட்டப்பூர்வ வயதான 21 வயதை அந்த இளைஞர் இன்னும் எட்டவில்லை என்பதால், அவர் ‘லிவ்-இன்’ உறவில் இருக்க அனுமதிக்கக் கூடாது” என்று வாதிட்டுள்ளார்.

ஆனால், இந்த வாதத்தை நீதிபதி நிராகரித்தார். “மனுதாரர்கள் திருமண வயதை எட்டவில்லை என்பதன் ஒரே காரணத்துக்காக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு 21-ன் கீழ் அவர்களுக்கு இருக்கும் வாழும் உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை மறுக்க முடியாது.” என்று நீதிமன்றம் திட்டவட்டமாகக் தெரிவித்திருக்கிறது.
“ஒவ்வொரு தனிநபரின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அரசியலமைப்புச் சட்டக் கடமையாகும்” என்று வலியுறுத்திய நீதிபதி அனுப் தாண்டே, “இந்தியச் சட்டப்படி, ‘லிவ்-இன்’ உறவுகள் தடை செய்யப்படவில்லை அல்லது குற்றமாக அறிவிக்கப்படவில்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.
மனுவில் கூறப்பட்டிருக்கும் உண்மைகளைச் சரிபார்த்து, அச்சுறுத்தல் குறித்து மதிப்பீடு செய்யவும், தேவைப்பட்டால் இந்த ஜோடிக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும், பீல்வாரா மற்றும் ஜோத்பூர் (கிராமப்புறம்) மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கு நீதிபதி தாண்டே உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு குறித்த உங்களது கருத்துக்களை கமென்ட்டில் தெரிவியுங்கள்!