Indigo: "மிக மோசமான நாள்; 3 நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்" – பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட இண்டிகோ CEO

நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, இன்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானச் சேவைகளை ரத்து செய்ததால், பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில், ‘டிசம்பர் 5 மிகக் கடுமையான நாள்’ என்று குறிப்பிட்டு இன்று மாலை பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) பீட்டர் எல்பெர்ஸ்.

தினசரி இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் மேலான விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பீட்டர் எல்பெர்ஸ் தெரிவித்துள்ளார்.

Indigo CEO பேசியதென்ன?

Indigo CEP Pieter Elbers
Indigo CEP Pieter Elbers

சனிக்கிழமையும் இந்தச் சிக்கல் தொடரும் என்றாலும், 1000க்கும் குறைவான எண்ணிக்கையிலே விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.

இண்டிகோ நிறுவனம், தினசரி சுமார் 2,300 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானச் சேவைகளை வழங்கி வருகிறது. விமானச் சேவைகள் தாமதமாவது மற்றும் ரத்து செய்யப்படுவதால் ஏற்பட்டுள்ள பெரும் சிரமத்துக்காக வீடியோ மூலம் மன்னிப்புக் கோரிய பீட்டர் எல்பெர்ஸ், “கடந்த சில நாட்களாக நாங்கள் கடுமையான இடையூறுகளை எதிர்கொண்டோம், டிசம்பர் 5 ஆம் தேதி மிக மோசமானது, இதன் விளைவாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது, இது எங்கள் தினசரியில் பாதிக்கும் மேல். இண்டிகோ சார்பாக, ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மனதார மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழல் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும், நாங்கள் எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என்பதில்தான் எங்கள் கவனம் உள்ளது.” எனப் பேசியுள்ளார்.

அத்துடன் நிலைமையை சமாளிக்க மூன்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். “முதலாவதாக, வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வது மற்றும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது. இதற்காக சமூக ஊடகங்களில் செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. மேலும், இது பற்றிய விரிவான தகவல், பணம் திரும்ப வழங்குதல், விமான ரத்து விவரங்கள் மற்றும் பிற வாடிக்கையாளர் ஆதரவு நடவடிக்கைகள் பற்றிய தகவல் இப்போது அனுப்பப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டார்.

“இரண்டாவதாக, நேற்று ஏற்பட்ட சூழ்நிலை காரணமாக, பயணிகள் பெரும்பாலும் நாட்டின் பெரிய விமான நிலையங்களிலேயே சிக்கித் தவித்தனர். இன்று அவர்களுக்குப் பயணத்தை உறுதி செய்வதில் எங்கள் கவனம் இருந்தது. இது நிச்சயம் எட்டப்படும். விமானச் சேவை ரத்து செய்யப்பட்ட வாடிக்கையாளர்கள், விமான நிலையங்களுக்கு வர வேண்டாம் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனக் கோரியுள்ளார்.

இறுதியாக, “மூன்றாவதாக, நாளை காலை முதல் ஃப்ரெஷ்ஷாக விமானச் சேவையைத் தொடங்க, விமானப் பணியாளர்களையும் விமானங்களையும் சரியாக அந்தந்த இடங்களில் ஒருங்கிணைப்பதற்காகவே இன்று அதிக அளவில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இண்டிகோ விமானம்
இண்டிகோ விமானம்

கடந்த சில நாள்களாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பது வருத்தமளிக்கிறது. ஆனால், நாளையில் இருந்து படிப்படியாக நிலைமை மேம்பட வேண்டும் என்பதற்காக, இதுவரை இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் விமானங்களை ரத்து செய்து, எங்கள் அமைப்புகள் மற்றும் அட்டவணைகள் அனைத்தையும் மறுசீரமைக்க (Reboot) இன்று முடிவு நடவடிக்கை மேற்கொண்டோம்” என்றார்.

இந்த நடவடிக்கைகள் மூலம் நாளை 1000க்கும் குறைவான விமானங்களே ரத்து செய்யப்படும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். நிலைமை படிப்படியாக முன்னேறி டிசம்பர் 10-15 தேதிகளுக்குள் இயல்புநிலை திரும்பும் எனக் கூறியுள்ளார்.

விமான நிலையங்களில் பெரும் குழப்பமான சூழல் நிலவிய நிலையில், இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) உடனடியாகத் தலையிட்டு, விமானிகளுக்கான இரவுப் பணிக் கடமை விதிகளிலிருந்து இண்டிகோவுக்குத் தற்காலிக விலக்கு அளித்தது. மேலும், வாராந்திர ஓய்வு நேரத்துக்காக விடுமுறைகளைப் பயன்படுத்துவதற்கும் அது அனுமதி அளித்தது. இதற்காக DGCAவுக்கு நன்றி தெரிவித்தார் அவர்.

இந்தச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றும், பொறுப்பானவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.