Suriya: `ரசிகர்களிடம் கொடுத்த வாக்கு' 2026-ல் சூர்யாவின் டார்க்கெட் இதுதான்

அடுத்தடுத்த அறிவிப்புகளைக் கொடுத்திருக்கிறார் சூர்யா. ‘ஆவேசம்’ ஜித்து மாதவன் இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘சூர்யா47’ படத்தின் பூஜை நேற்று எளிமையாக நடந்திருக்கிறது. அன்றே படப்பிடிப்பும் தொடங்கியிருக்கிறது. ‘கருப்பு’ ரிலீஸை நோக்கிக் காத்திருக்கிறது. ‘சூர்யா 46’ போஸ்ட் புரொடக்‌ஷனை தொடுகிறது. ‘சூர்யா 47’ அமர்களமாக ஆரம்பமாகியிருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன தெரியுமா?

Surya 47
Surya 47

சூர்யா இப்போது ‘கருப்பு’ படத்தை அடுத்து வெங்கி அட்லூரியின் படத்திலும், ஜித்து மாதவன் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இதில் ‘கருப்பு’ படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் சூர்யாவின் ஜோடியாக த்ரிஷா, சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவதா, அனகா, யோகிபாபு எனப் பலரும் நடித்துள்ளனர். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு, சாய் அபயங்கர் இசை என பலருடன் முதல் முறையாக கைகோத்திருக்கிறார் சூர்யா. இந்த படத்தின் பேட்ச் ஒர்க் வேலைகள் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. வரும் ஜனவரி 23ம் தேதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வெளிவருவதற்கு முன்னரே சூர்யாவின் காஸ்ட்யூமான கறுப்பு நிற வேட்டி, சட்டை ‘கருப்பு’ லோகோவுடன் விற்பனைக்கு வந்திருக்கிறது.

வெங்கி அட்லூரி படத்தில்

வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு ஊட்டி, ஹைதராபாத்தில் நடந்துள்ளது. இந்தப் படத்தில் மமிதா பைஜூ, ரவீணா டாண்டன், ராதிகா, பாவனி ஶ்ரீ எனப் பலரும் நடித்துள்ளனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் பொங்கல் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டைலிஷான சூர்யாவை இதில் பார்க்கலாம் என்கிறார்கள். சில இயக்குநர்கள் பிரமாண்டத்தை நம்பி எமோஷனலான விஷயங்களைக் கோட்டை விட்டுவிடுவார்கள். ஆனால், வெங்கி அட்லூரியை பொறுத்தவரை ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ என அவரது படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகள் மேலோங்கி நிற்கும்.

வெங்கி அட்லூரியுடன்..

இன்னொரு விஷயத்தையும் சொல்கிறார்கள். ‘ஜப்பான்’ படத்தின் தோல்விக்குப் பின் கார்த்தி, முன்பைவிட வீறு கொண்டு எழுந்து அடுத்தடுத்து விதவிதமான ஜானர்களை தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதைப்போல, சூர்யாவும் இப்போது ஒரே ஆண்டில் இரண்டு, மூன்று படங்கள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அவரது ‘கருப்பு’ கடந்த தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், படம் அடுத்த வருடம் தொடக்கத்திற்கு சென்றுவிட்டது. இந்நிலையில் அவர் ‘கருப்பு’ படப்பிடிப்பு நிறைவு கட்டத்தை நெருங்கும்போது, ‘சூர்யா 46’ ஆரம்பித்தார். இப்போது அந்த படமும் முடிந்துள்ளதால் ‘சூர்யா 47’க்கு வந்திருக்கிறார்.

சூர்யா 46
சூர்யா 46

நேற்று பாலவாக்கத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் எளிமையான முறையில் ‘சூர்யா 47’க்கான பூஜை நடந்திருக்கிறது. இந்த படத்தில் சூர்யா போலீஸாக வரவிருக்கிறார் என்ற தகவல் ஓடுகிறது. ‘காக்க காக்க’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ என சூர்யாவுக்கு போலீஸ் கேரக்டர்கள் பலமாக அமைந்துள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. நஸ்ரியா இந்தப் படத்தின் மூலம் நேரடி தமிழுக்கு கம்பேக் ஆகியிருக்கிறார். ‘பிரேமலு’ நஸ்லன், ஆனந்தராஜ் எனப் பலரும் நடிக்கின்றனர். ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் இசையமைக்கிறார். ‘மின்னல் முரளி’ உன்னி பலோடே ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யா, ஜோதிகாவின் புது பேனரான ‘ழகரம் ஸ்டூடியோஸ்’ படத்தைத் தயாரிக்கிறது. பெரும்பகுதி படப்பிடிப்பு கொச்சியில் நடைபெறும் என்கிறார்கள்.

Surya 47 - சூர்யா
Surya 47 – சூர்யா

சூர்யாவின் ரசிகர்கள் அவரிடம் நீங்க வருஷத்துக்கு இரண்டு படங்களில் நடிக்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுத்தி வந்தனர். சூர்யாவும் அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க முடிவு செய்தார். ரசிகர்களின் சந்திப்பில் கூட இனி வருடத்திற்கு இரண்டு படங்களில் நடிப்பேன் என்பதை உறுதி படுத்தினார். 2026லிருந்து இனி ஆண்டுக்கு மினிமம் இரண்டு படங்கள் என தீர்மானித்தார். இப்போது அசூர வேகத்தில் அதனை நிறைவேற்றியும் வருகிறார். அடுத்தாண்டு அவரது நடிப்பில் மூன்று படங்கள் திரைக்கு வருகிறது என்பதால் மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள் சூர்யாவின் ரசிகர்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.