தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தனது 26வது படமாக ‘வா வாத்தியார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். “சூது கவ்வும், காதலும் கடந்து போகும்” உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.
இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய நடிகர் கார்த்தி,
“இந்தப் படம் நடிக்க ஒப்புக்கொண்டபிறகு கேரக்டருக்குள்ள போலாம்னு முடிவு பண்ணியாச்சு. உள்ள போனா, எம்.ஜி.ஆர் ஒரு பெரிய கடல் மாதிரி அவ்ளோ விஷயம் கிடைக்கிது. அவரைப்பற்றி பேசினாலே புல்லரிக்குது. இன்னைக்கும் நீங்க அவர் ரசிகர்கள் வீட்டுக்குச் சென்றால், அவருடைய புகைப்படத்தை பார்க்க முடியும்.
அதுக்கு பொட்டு வச்சு, மாலை போட்டு சாமியா கும்பிட்டுட்டு இருப்பாங்க. அப்படி ஒரு பெரிய ஐகான். அவர் வெறும் நடிகர் இல்ல, அவர் ஒரு எமோஷன், ஒரு தனி சகாப்தம். அவர் வாழ்க்கையில சந்திக்காத கஷ்டமே கிடையாது. தமிழ் சினிமா, தமிழ்நாட்டு அரசியல்னு அவர் மாற்றம் கொண்டுவந்த விஷயங்கள் நிறைய இருக்கும். எத்தனையோ பேர் வாழ்க்கையை மாற்றியிருக்கார்.
அவர் ரசிகர்களுக்கு நல்லதை மட்டுமே சொல்லியிருக்கார். என் ரசிகனும் என்னைப்போல இருக்கணும்னு வாழ்ந்திருக்கார். அவரோட ரசிகர்களுக்கு குடி, சிகரெட்னு எந்தக் கெட்டப்பழக்கமும் இருக்காது. எப்படி இவ்வளவு இன்ஃப்ளுவன்சியலா இருந்திருக்க முடியும்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.
அவர் பாடல்கள் மூலமா அவ்வளவு விஷயங்களை சொல்லிட்டு போயிருக்கார். தன்னம்பிக்கை வேணும்னா இன்னைக்கும் அவரோட பாடல்கள் தான் நமக்கு உதாரணமா இருக்கு. அவரைப்பற்றி பேசிட்டே இருக்கோம். ‘வாழ்ந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்… இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்’-னு அவரே பாடிட்டு, அதே மாதிரி வாழ்ந்துட்டும் போயிட்டார்.
நம்மளுடைய சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு அவருடைய பெயர்தான் வச்சிருக்காங்க. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 400 ரயில் இங்கிருந்து கிளம்புது. ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5000 தடவை அவருடைய பெயரை சொல்லிட்டே இருக்காங்க. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ்ந்துட்டு போயிருக்கார்” என்றார்.