இளஞ்சிவப்பு நகரமான ஜெய்ப்பூரில் ஒரு புதிய காற்று வீசதொடங்கியுள்ளது. ஐபிஎல் 2026 சீசனுக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி செய்துள்ள மாற்றங்கள் ரசிகர்களை புருவம் உயர்த்த வைத்துள்ளன. குறிப்பாக, நீண்ட கால கேப்டனான சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வழி அனுப்பிவிட்டு, அதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் போன்ற ஆல்-ரவுண்டர்களை டிரேட் செய்தது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Add Zee News as a Preferred Source

ஏலத்தில் ராஜஸ்தானின் அணுகுமுறை
அபுதாபியில் நடைபெற்ற மினி ஏலத்திற்கு செல்லும்போதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் ரூ. 16.05 கோடி என்ற குறைவான பட்ஜெட்டே இருந்தது. 9 இடங்களை நிரப்ப வேண்டிய கட்டாயத்தில் இருந்த அவர்கள், பெரிய அளவில் பணத்தை வாரி இறைக்காமல், தங்களின் தேவையை மட்டும் குறிவைத்து செயல்பட்டனர். அணியின் முக்கிய தேவையாக இருந்த ஒரு தரமான சுழற்பந்து வீச்சாளரை வாங்குவதில் அவர்கள் குறியாக இருந்தனர்.
புதிய வரவுகள்
ராஜஸ்தான் அணியின் இந்த திட்டத்திற்கு உயிர் கொடுக்கும் வகையில், இந்திய அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் அணியில் இணைக்கப்பட்டுள்ளார். இவரை ரூ. 7.2 கோடி கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என்றே சொல்லலாம். கூக்ளி பந்துகளை வீசுவதில் வல்லவரான பிஷ்னோய், ஜெய்ப்பூர் போன்ற மைதானங்களில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார். ஏலத்திற்கு முன்பே ராஜஸ்தான் அணி சில துணிச்சலான முடிவுகளை எடுத்தது. அணியின் முகமாக இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு, அங்கிருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகியோரை வாங்கியது. ஜடேஜாவின் அனுபவமும், சாம் கரனின் ஆல்-ரவுண்டர் திறமையும் அணிக்கு கூடுதல் பலம்.

மேலும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிடமிருந்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரீராவை வாங்கியுள்ளது, பினிஷிங் ரோலுக்கு உதவும். யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் போன்ற இளம் இந்திய பட்டாளத்தை ராஜஸ்தான் தக்கவைத்துள்ளது. வெளிநாட்டு வீரர்களில் ஷிம்ரோன் ஹெட்மையர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அணியின் முக்கிய தூண்கள். ராஜஸ்தானின் வேகப்பந்து வீச்சு இம்முறை மிரட்டலாக உள்ளது. ஜோஃப்ரா ஆர்ச்சர், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா என ஒரு தென்னாப்பிரிக்க – இங்கிலாந்து வேக கூட்டணி அமைந்துள்ளது. இவர்களுக்குத் துணையாக இந்திய சூழலில் சிறப்பாக செயல்படும் சந்தீப் சர்மா மற்றும் துஷார் தேஷ்பாண்டே உள்ளனர். சுழற்பந்து வீச்சில் ரவி பிஷ்னோய் மற்றும் ஜடேஜா கூட்டணி எதிரணியை திணறடிக்க காத்திருக்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி விவரம்
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரல் (WK), ஷிம்ரோன் ஹெட்மையர், சுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, டோனோவன் ஃபெரீரா (WK), ரவீந்திர ஜடேஜா, சாம் கரன், ரியான் பராக், ஜோஃப்ரா ஆர்ச்சர், ரவி பிஷ்னோய், சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, யுத்வீர் சிங் சரக், நான்ட்ரே பர்கர், க்வேனா மபாகா, லுவான்-ட்ரே பிரிட்டோரியஸ்.
சஞ்சு சாம்சன் இல்லாதது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தாலும், ஜடேஜா மற்றும் சாம் கரன் வருகை அணிக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. புதிய கேப்டன் யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2026 தொடரில் ராஜஸ்தான் அணிக்கு ஜடேஜா கேப்டனாக பொறுப்பேற்க அதிக வாய்ப்புள்ளது. இந்த மாற்றங்களுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் 2026 சீசனில் ஒரு வலுவான போட்டியாளராக களமிறங்கும் என்பதில் சந்தேகமில்லை.
About the Author
RK Spark