State Awards: "எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக இதை முன்வைக்கவில்லை" – 'கைதி' மோனிகா ஆதங்கம்

2016 முதல் 2022-ம் ஆண்டு வரைக்குமான தமிழக அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

விருது அறிவிக்கப்பட்டவர்கள் பலரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துப் பதிவிட்டு வருகின்றனர்.

சிலர் விருது நியாயமான முறையில் அறிவிக்கப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியுடன் இதனை விமர்சித்தும் வருகின்றனர்.

இந்நிலையில், ‘கனா’, ‘கைதி’ உள்ளிட்ட படங்களில் நடித்த குழந்தை நட்சத்திரம் மோனிகா, இந்த விருது அறிவிப்பு குறித்து விமர்சித்துப் பதிவிட்டிருக்கிறார்.

Monica - Child Artist
Monica – Child Artist

அந்தப் பதிவில் அவர், “தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளின் வெற்றியாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதைப் பார்த்தேன். ஐந்து வயதிலிருந்தே நான் திரைப்படத் துறையில் நடித்து வருகிறேன். 2016 முதல் 2022 வரை, இருபதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளேன்.

அவற்றில் பல திரைப்படங்கள் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டு, கொண்டாடப்பட்டன. சில திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்படாமல் இருந்தாலும், நான் நடித்த பல கதாபாத்திரங்கள் நினைவில் நிற்கக்கூடியவையாக இருந்தன.

மேலும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் என்னால் இயன்ற சிறந்த முயற்சியையும் நான் வழங்கியுள்ளேன். ‘கைதி’, ‘ராட்சசன்’, ‘கனா’, ‘ஆண் தேவதை’, ‘சங்குசக்கரம்’ போன்ற திரைப்படங்களில் பிரதானமும் முக்கியத்துவமுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன்.

இருப்பினும், தற்போது தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்றவர்கள், அத்தகைய அங்கீகாரத்தை அளிக்கும் அளவிற்கான வேடத்தில் நடிக்கவில்லையோ என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.

இந்த விஷயத்தை நான் எனக்கு விருது கிடைக்கவில்லை என்பதற்காக முன்வைக்கவில்லை. இப்படி ஒரு சூழ்நிலை ஏற்படவில்லை என்றால், இதைப் பற்றி பேச வேண்டும் என்று நான் எண்ணியிருப்பேனா என்பது எனக்கே தெரியாது.

அந்தக் காலகட்டத்தில் என்னைப் போலவே பல குழந்தை நடிகர்கள் சிறப்பான கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடையே பாராட்டைப் பெற்றிருந்தனர்.

அவர்களில் யாருக்காவது இந்த விருது வழங்கப்பட்டிருந்தால், அது தகுதியான ஒருவருக்கு வழங்கப்பட்டதாக நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன்.

ஆனால், தற்போதைய நிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முக்கியமாக, இது தனிநபர்கள் அல்லது ஒரு தனியார் நிறுவனத்தால் வழங்கப்படும் விருது அன்று.

யாரோ ஒருவரின் பரிந்துரையாலோ அல்லது செல்வாக்கினாலோ வழங்கப்படும் விருதாகவும் இல்லை. இது அரசால் வழங்கப்படும் மாநில விருது.

உண்மையான திறமையைப் பாராட்டும், ஒவ்வொரு நடிகருக்கும் மிக முக்கியமான ஒரு பெருமைமிக்க அங்கீகாரம். அந்த அங்கீகாரம் பெற வேண்டியவர்களுக்குக் கிடைக்காமல் போகும்போது, அது மனதிற்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது.

உண்மையில், இந்த விஷயத்தைக் கேள்வி எழுப்பிப் பேசுவது என் உரிமை என்றே நான் கருதுகிறேன். இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும்போது, விருதுகளின் மீது உள்ள நம்பிக்கையும் மதிப்பும் மெதுவாகக் குறைந்துவிடுகிறது.

இந்த விஷயத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் மற்றும் இத்துறை சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்வுக்குழுவினர் கவனத்தில் கொண்டு, உரிய முறையில் பரிசீலிப்பார்கள் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.