India Opponent In T20 World Cup Super 8 Round: டி20 உலகக் கோப்பை தொடர் பிப்ரவரி 07ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடர் தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. குரூப் சுற்றுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் முடிய இருக்கிறது. அடுத்ததாக சூப்பர் 8 சுற்று தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில், இதுவரை இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை அணிகள் அச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
Add Zee News as a Preferred Source
இக்கட்டான நிலையில் ஆஸ்திரேலியா அணி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற சிரமத்தை சந்தித்துள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக நேற்று நடைபெற்ற இலங்கைக்கு எதிரான போட்டியில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படுதோல்வியை சந்தித்து தற்போது சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பெரிதாக இழந்துள்ளது.
சூப்பர் 8க்கு தகுதி பெற்ற இலங்கை
ஆஸ்திரேலியா அணி குரூப் பி-ல் உள்ளது. அந்த அணியுடன் இலங்கை, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் உள்ளன. இதில் ஓமன் அணி ஏற்கனவே எலிமினேட் ஆகிவிட்டது. மொத்தம் இரண்டு அணிகள் தகுதி இந்த குரூப்பில் இருந்து தகுதி பெற வேண்டும். இலங்கை அணி நேற்றைய போட்டிக்கு பின் தகுதியடைந்த நிலையில், மீதமுள்ள ஒரு இடத்திற்கு கடும் போட்டி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியா அணி தகுதி பெறுமா?
ஆஸ்திரேலியா அணிக்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. அப்போட்டி ஓமனுடன் உள்ளது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா வெல்ல வேண்டும். அதேசமயம் ஜிம்பாப்வே அணிக்கு இன்னும் இரண்டு போட்டிகள் உள்ளன. ஒன்று அயர்லாந்து அணியுடனும் மற்றொன்று இலங்கை அணியுடனும் உள்ளன. இந்த இரண்டு போட்டிகளிலுமே ஜிம்பாப்வே அணி தோற்க வேண்டும். இப்படி நடந்தாலும், ஆஸ்திரேலியா அணியின் ரன் ரேட் அயர்லாந்து அணியை விட அதிகமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.
சூப்பர் 8ல் இந்திய அணி யாருடன் மோதும்?
ஆஸ்திரேலியா அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால், இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணி மோதும். அப்படி இல்லையென்றால், இந்திய அணியுடன் ஜிம்பாப்வே மோதும் என தெரிகிறது. இந்திய அணியுடன் யார் மோதினாலும் இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கான சூப்பர் 8 போட்டிகள்
இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் 3 அணிகளுடன் மோத உள்ளன. அதில் இரண்டு அணிகள் உறுதியாகி உள்ளது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியுடனும் மூன்றாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும் விளையாடுகிறது. இரண்டாவது போட்டியில்தான் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மோத இருக்கிறதா அல்லது ஜிம்பாப்வே அணியுடன் மோத இருக்கிறதா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
About the Author
R Balaji