மகாராஷ்டிரா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார் அஜித் பவார்- இயற்கை எரிவாயு வாட் வரி குறைப்பு

மகாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், நிதி அமைச்சருமான அஜித் பவார் இன்று சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது அவர் பல்வேறு வரி சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் குறித்தும் அறிவித்தார். வரும் 2022-2023-ம் நிதியாண்டு திட்டத்திற்காக ரூ.1.50 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில், பட்ஜெட் மதிப்பீட்டின்படி வருவாய் வரவாக ரூ. 403427 கோடியாகவும், செலவகினம் ரூ. 4,27,780 கோடியாகவும் இருக்கும் என்றும் இதனால் ரூ.24,353 கோடி வருவாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் பவார் கூறியுள்ளார்.  

மேலும், 2021-22-ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட மதிப்பீட்டின்படி வரி வருவாய் ரூ.2,75,498 கோடியாக இருக்கும். இதில் ஜிஎஸ்டி, வாட், மத்திய விற்பனை வரி, தொழில்முறை வரி மற்றும் பிற முக்கிய வரிகள் ஆகியவற்றின் அடிப்படையில் ரூ.1,55,307 கோடி மதிப்பீட்டின் திருத்தப்பட்ட மதிப்பீடாக அடங்கும்.

ஜிஎஸ்டி வரி நிலுவைத் தொகைக்கான தள்ளுபடி திட்டம், மகாராஷ்டிரா வரி, வட்டி, அபராதம் அல்லது  தாமதக் கட்டணத் திட்டம் 2022 என அழைக்கப்படும்.. இந்த திட்டத்திற்கான காலம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30, 2022-ம் ஆண்டு வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கும் குறைவான நிலுவைத் தொகையாக இருந்தால் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும் 10 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக வைத்திருக்கும் நிலுவைத் தொகையில் 20 சதவீதம் மட்டும் மொத்தமாக செலுத்தி, மீதமுள்ள தொகைக்கு தள்ளுபடி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், சிறு வியாபாரிகள் பயனடைவர்கள் என்றும் நடுத்தர வியாபாரிகள் 2.25 லட்சம் பேர் பயனடைவர்கள் என்றும் பவார் கூறியுள்ளார். மற்ற சலுகைகளில் பரிசுப் பத்திரத்தின் மீதான 3 சதவீத முத்திரைப் பதிவும், விற்பனைப் பத்திரத்தின் மீதான 5 சதவீத முத்திரை வரியும் விலக்கு அளிக்கப்படுகிறது. இதனால், அரசுக்கு ரூ.21 கோடி செலவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

பயணிகள் மற்றும் செல்லப்பிராணிகள், வாகனங்கள் மற்றும் படகுகள் மற்றும் ரோ-ரோ படகுகளில் பயணிக்கும் பொருட்களுக்கு மகாராஷ்டிரா கடல்சார் வாரியத்தால் விதிக்கப்படும் வரி மூன்று ஆண்டுகளுக்கு தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இயற்கை எரிவாயுவிற்கான வாட் வரி குறைப்பை முன்மொழிந்த பவார், இயற்றை எரிவாயு மீதான வாட் வரி 13.5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் இதனால் 800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்றும் கூறினார்.

 

பட்ஜெட்டில் விவசாயம், சுகாதாரம், மனிதவளம், போக்குவரத்து மற்றும் தொழில்துறை ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, ஐந்து அம்ச மேம்பாட்டுத் திட்டத்துடன், இந்தத் துறைகளுக்கு அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.4 லட்சம் கோடியை அரசாங்கம் வழங்கும் என்று அவர் கூறினார்.

2020ல் அறிவிக்கப்பட்ட பயிர்க்கடனை முறையாக திருப்பிச் செலுத்தும் விவசாயிகளுக்கு தலா ரூ.50,000 ஊக்கத்தொகை நிதி திட்டம் கொரோனா நெருக்கடி காரணமாக விநியோகிக்க முடியவில்லை. அது வரும் ஆண்டு முதல் வழங்கப்படும் என்று பவார் கூறினார்.

இந்த மானியத்தால் சுமார் 20 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் கருவூலத்திற்கு ரூ.10,000 கோடி செலவாகும் என்றும் அவர் கூறினார்.

கொரோனாவிற்குப் பிறகு மாநிலத்தின் பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது, ஆனால் உக்ரைனில் நடந்து வரும் போரால் உலகப் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால் மாநிலத்தில் விவசாயம், தொழில் மற்றும் சேவைகள் போன்ற துறைகளை பாதிக்கும் என்று பவார் கூறினார்.

இதையும் படியுங்கள்..
காங்கிரஸ் விரும்பினால் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அனைவரும் இணையலாம்- மம்தா அழைப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.