பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்க வேண்டும்- வைகோ அறிக்கை

சென்னை:

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தென் மண்டல பல்கலைக்கழகங்களின் நூற்றுக்கும் மேற்பட்ட துணைவேந்தர்கள் பங்கேற்ற, கோவை மாநாட்டில் உரை ஆற்றிய கவர்னர் ரவி, தமது அதிகார வரம்பை மீறி, அரசியல் கருத்துகளைப் பேசி இருப்பது கண்டனத்திற்கு உரியது.

மாணவர்கள் இடையே, அறிவியல் மனப்பான்மையை, பல்கலைக் கழகங்கள் வளர்க்க வேண்டும். மாநில அரசுகளின் கல்விக் கொள்கையின்படிதான் பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பம்; அதைத் துணைவேந்தர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே பட்டம் வழங்குவது மட்டும் பல்கலைக் கழகங்களின் கடமை அல்ல, அதன்பிறகு, அந்தத் தகுதிக்கு உரிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதும், பல்கலைக்கழகங்கள் பொறுப்பு ஆகும். எனவே, அத்தகைய திறன்சார்ந்த கல்வி மற்றும் பயிற்சிகளை, பல்கலைக்கழகங்கள் கற்பிக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகளின் செயல்பாடுகளுக்கு, முட்டுக்கட்டை போடுகின்ற வேலையைத்தான் கவர்னர்கள் தொடர்ந்து செய்து வருகின்றார்கள்.

தமிழ்நாட்டின் முந்தைய கவர்னர் தற்போதைய பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித், மேற்கு வங்கத்தின் தற்போதைய கவர்னர் ஜெக்தீப் தங்கர் ஆகியோர், அரசு அமைப்புச் சட்டத்தைத் தொடர்ந்து மீறி வருகின்றனர். மேற்கு வங்க அரசை, முதல்வரை நாள்தோறும் கடுமையாக வசைபாடி, சுட்டுரைகள் எழுதி வருகின்றார். ஜெகதீப் தங்கர்.

7 பேர் விடுதலை குறித்த பிரச்சினையில், தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றிய தீர்மானத்தை, தமிழக கவர்னர் ரவி திருப்பி அனுப்பி, ஏழரைக் கோடித் தமிழர்களை அவமதித்து இருக்கின்றார். எனவே, அவர், கவர்னர் பொறுப்பில் நீடிக்க அடிப்படை ஏதும் இல்லை.

பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பில் இருந்து கவர்னரை நீக்க, மராட்டிய அரசு தீர்மானித்து இருக்கின்றது. அதேபோல, தமிழ்நாட்டின் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பில் இருந்து, கவர்னர் ரவியை நீக்க வேண்டும் என வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்… வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.