பணத்தை கொண்டு வரவில்லை, மக்களின் மனத்தையே எடுத்து வந்திருக்கிறேன்- அபுதாபியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (28.3.2022) அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசியதாவது:-

நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது  உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன்.

தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான பயணமாக என்னுடைய பயணம் என்று சொல்லப்பட்டாலும், அதற்காக சுற்றுப் பயணத்தை வகுத்திருந்தாலும், இன்னும் அதைத் தாண்டி சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கின்ற பயணமாக என்னுடைய  பயணம் அமைந்திருக்கிறது.

ஆனால், இந்தப் பயணம் இவ்வளவு வெற்றி அடைந்து கொண்டிருக்கிறதே, இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறதே, ஊடகங்களில் பார்க்கிறார்கள், பத்திரிகைகளில் படிக்கிறார்கள், தொலைக்காட்சியில் இந்தக் காட்சிகளையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் திசை திருப்ப வேண்டும், ஒரு தவறான பிரசாரத்தை நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டு, நான் பணத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பதாக கூறுகிறார்கள். நான் அரசியல் பேசுவதாக நீங்கள் கருதக்கூடாது, நான் அரசியல் பேசினேன் என்றால் நீங்கள் என்னை விடமாட்டீர்கள், அது வேறு அதுவும் எனக்குத் தெரியும். நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை, தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களுடைய மனத்தைத் தான் எடுத்து வந்திருக்கிறேன், அதுதான் உண்மை.

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதுதான் திராவிட மாடல். அந்த திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, பல துறைகள் இருந்தாலும், முக்கியமான துறைகளில் ஒன்று, தொழில் துறை. அந்தத் தொழில் வளர்ச்சி என்பது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தினுடைய வளர்ச்சி மட்டுமல்ல, ஒரு தொழில் நிறுவனம் தொடங்குகின்றபோது, அந்த நிறுவனத்தோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைகிறார்கள். அந்த நிறுவனத்தின் மூலமாக மாநிலமே வளர்ச்சி பெறுகிறது. அத்தகைய வளர்ச்சிக்கு இந்த ஐக்கிய அரபு அமீரகமும், அதன் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் விரும்பி, வேண்டி கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.

இந்தப் பயணத்தில், நான் பெருமையோடு சொல்கிறேன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. துபாய் இல்லாமல் – துபாய் நிறுவனங்கள் இல்லாமல் ஒரு மாநிலம் வளர முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனால்தான் முதல் வெளிநாட்டுப் பயணமாக துபாய் பயணத்தைத் தான் நான் தேர்ந்தெடுத்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இத்தனை நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.

துபாய்க்கு வந்த பிறகு, இதனை வெளிநாட்டுப் பயணம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சொந்த நாட்டுக்குள் இருப்பது போன்று தான் நான் உணர்கிறேன்.  அந்த உணர்வை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.