திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரசாத். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். இவருக்குத் திருமணமாகி தனலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். சமீபத்தில் பிரசாத் பணத் தேவைக்காக ஆன்லைனில் கடன் வழங்கும் ஆப் மூலமாகக் கடன் பெற விண்ணப்பித்துள்ளார். மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் கடன் கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார்.

அந்த நிறுவனம் கடன் வழங்க வைப்புத் தொகையாக 86 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறது. இதனால், பிரசாத் அந்த நிறுவனத்துக்கு ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 86 ஆயிரம் ரூபாயைச் செலுத்தியுள்ளார். பணம் கட்டிய நிலையில், நேற்று அந்த கடன் வழங்கும் நிறுவனம் உங்களுக்குக் கடன் தரமுடியாது என்று கூறியுள்ளது. இந்த செய்தி கேட்டுச் செய்வதறியாது தவித்துள்ளார்.
ஏமாந்துவிட்டோம் என்று மிகுந்த மன உளைச்சலில் இருந்திருக்கிறார் பிரசாத். இந்த நிலையில்தான், இன்று அதிகாலை பிரசாத் வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு அவரின் மனைவி சென்றிருக்கிறார். அங்கு பிரசாத் தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அலறித் துடித்துள்ளார். அவரின் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பிரசாத்தை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

பிரசாத்தைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக பெரியபாளையம் பகுதி காவல்துறையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த தற்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.