மும்பை: சாதியும், மதமும் மக்களின் பசி, வேலையின்மையை போக்குமா? என்று முதல்வர் உத்தவ் மற்றும் ராஜ் தாக்கரேக்களை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மறைமுகமாக சாடி பேசினார். மகாராஷ்டிராவில் அரசியலில் தற்போது அனுமன் சாலிசா விவகாரம் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது. இவ்விவகாரத்தை கையில் எடுத்துள்ள மகாராஷ்டிரா நவ் நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, ஆளும் கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். மேலும் வழிபாட்டு தலங்களில் ஒலிபெருக்கிகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறி போராட்டங்களை அறிவித்தார். இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், ஆளும் கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சரத்பவார் கூறுகையில், ‘சமீப காலமாக சாதி மற்றும் மதத்தின் பெயரால் நடக்கும் சம்பவங்களை பார்க்கும்போது கவலையாக உள்ளது. நாட்டை மீண்டும் சாதி, மதத்தால் பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன. இன்று மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் என்ன? என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கண்ணியத்துடன் வாழ்வது போன்ற பிரச்னைகள் உள்ளன; ஆனால் யாரும் (முதல்வர் உத்தவ் தாக்கரே) அவற்றைக் கவனிக்கவில்லை. சாதி, மதத்தின் ெபயரால் போராட்டங்களை நடத்துவதால் (ராஜ் தாக்கரே), அடிப்படை பிரச்னைகளான பசியும், வேலையின்மையையும் போக்குமா?. மக்களின் அடிப்படைப் பிரச்னைகளில் இருந்து, அவர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதன் மூலம் சில ஆதாயங்களை பெற முயற்சிகள் நடக்கின்றன. பிரசாரமாக செய்து வருகின்றனர். இப்பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டுமானால், சத்ரபதி ஷாஹு மகாராஜ், மகாத்மா ஜோதிபா பூலே, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற புகழ்பெற்ற சீர்திருத்தவாதிகளின் சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும்’ என்றார்.
