சென்னை இ.சி.ஆர் சாலைக்கு கருணாநிதி பெயர்: ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை-மாமல்லபுரம் இடையேயான கிழக்கு கடற்கரை சாலைக்கு ‘முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி’ பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நெடுஞ்சாலைத்துறை பவள விழாவில் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சென்னை கிண்டியில் நெடுஞ்சாலைத்துறையின் பவள விழா ஞாயிற்றுக்கிழமை (மே 1) நடைபெற்றது. நெடுஞ்சாலைத் துறை பவளவிழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், பல்வேறு சாலை மற்றும் பாலப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குமரியில் திருவள்ளுவர் சிலை – விவேகானந்தர் பாறையை இணைக்கும் கண்ணாடி இழை நடைபாதை பணிக்கு அடிக்கல் நாட்டினார். சென்னை, கிண்டியில் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடைபெறும் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

75 ஆம் ஆண்டு பவள விழா நினைவுத் தூணை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: “மக்கள் பயன்பாட்டில் மிகவும் முக்கியமானத்துறை தமிழக நெடுஞ்சாலைத்துறை. 1946ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு இன்றோடு 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு இந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் இந்த நெடுஞ்சாலைத்துறைதான். 1954 ஆம் ஆண்டு நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையத்தை உருவாக்கி இந்தியாவிலேயே மாநில அளவிலான முதல் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் என்ற பெருமையைப் பெற்றது. இதுதான் இந்தியாவிற்கே முன் மாதிரியான ஆராய்ச்சி நிலையம். நெடுஞ்சாலைத்துறைக்கென தனி அமைச்சகம் 1998 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதனை உருவாக்கியது நம்மை ஆளாக்கிய கலைஞர்.

நாட்டில் சிறந்த மேம்பாலங்களில் ஒன்று சென்னை அண்ணா மேம்பாலம். முன்னாள் முதலமைச்சர் கலைஞரால் திட்டமிட்டு கட்டப்பட்டது அண்ணா மேம்பாலம். நாட்டின் சிறந்த மேம்பாலங்களில் ஒன்றாக இன்றும் திகழ்கிறது அண்ணா மேம்பாலம். நெல்லை ஈரடுக்கு மேம்பாலம் இந்தியாவின் முதல் ஈரடுக்கு மேம்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான் ஏராளமான பாலங்கள் கட்டப்பட்டன. அரசுக்கு நல்ல பெயரும் அவப்பெயரும் நெடுஞ்சாலைத்துறை மூலமே கிடைக்கும். அந்த அளவிற்கு முக்கியமான துறை இது. சாலைகள் தரமானதாக இருந்தால் மக்கள் பாராட்டு, அரசுக்கு தானாகவே கிடைக்கும்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை இனி ‘முத்தமிழறிஞர் கலைஞர் சாலை’ என அழைக்கப்படும்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.